ஜாதி பெயரை கூறி திட்டிய ஐவருக்கு 2 ஆண்டு சிறை
ஷிவமொக்கா: பெண்ணை ஜாதி பெயரை சொல்லி திட்டிய ஐந்து பேருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, பத்ராவதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதி தாலுகாவின், ஹிரயூர் கிராமத்தில் ஒரு பெண், குடிசை போட்டு வசித்து வருகிறார். இவர் வசிக்கும் இடத்தை அபகரிக்க அதே கிராமத்தின் சந்திரப்பா, கங்கம்மா, சந்தோஷ், மஞ்சுநாத், கவிதா முயற்சித்ததாக கூறப்படுகிறது. கடந்த 2023ல், அப்பெண்ணின் குடிசையை சேதப்படுத்தினர். அங்கிருந்த பொருட்களை வெளியே வீசினர். அத்துடன் அவரது ஜாதி பெயரை சொல்லி திட்டினர். இது குறித்து, அவர் பத்ராவதியின், காகதநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும் விசாரணை நடத்தினர். சந்திரப்பா, கங்கம்மா, சந்தோஷ், மஞ்சுநாத், கவிதா ஆகியோரை கைது செய்து, பத்ராவதி நகரின், நான்காவது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதியானதால், ஐவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி இந்திராணி மைலிசாமி, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 2.50 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கும்படி உத்தரவிட்டார்.