கால்வாய்களை மூடியதே வெள்ளப்பெருக்குக்கு காரணம்
பெங்களூரு: 'மழைநீர்க் கால்வாய்களை மூடியதே, மான்யதா டெக் உட்பட, பல்வேறு டெக் பார்க்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம்' என, அறிக்கையில் வல்லுநர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.பெங்களூரில் சாதாரண மழை பெய்தாலே, வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை அறிய, மாநில அரசு வருவாய்த்துறை தலைமை செயலர் தலைமையில், வல்லுநர் கமிட்டி அமைத்தது.கமிட்டியும் ஆய்வு செய்து, அறிக்கை அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாக வெளியான தகவல்:மான்யதா டெக்பார்க் உட்பட, பல்வேறு டெக் பார்க்குகள், மழைநீர்க் கால்வாய்களை மூடி, கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட, இதுவே முக்கிய காரணமாகும். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மழைநீர்க் கால்வாய்கள் அமைப்பது மிகவும் அவசியம்.இதற்கான முழுமையான செலவை, கால்வாயை ஆக்கிரமித்த தனியார் நிறுவனங்களிடமே வசூலிக்க வேண்டும். கால்வாய்கள் கட்ட தேவையான நிலத்தை, அனைத்து தனியார் நிறுவனங்களே இலவசமாக வழங்க வேண்டும். மான்யதா டெக்பார்க் உட்புறத்தில் போடப்பட்ட கான்கிரீட்டும், கட்டுமான பணிகளும் வெள்ள பிரச்னைக்கு காரணம்.மான்யதா டெக் பார்க் பிரதிநிதிகள் கூறுவதை போன்று, மழைநீரை பம்ப்களை பயன்படுத்தி, நீரை வெளியேற்றுவது அல்லது சம்ப்களை கட்டுவது, நிரந்தர தீர்வாக இருக்காது. கால்வாய் அமைப்பது நல்லது. இதற்காக கட்டடங்களை இடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இடிக்காமலும் கால்வாய்கள் அமைக்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.