ஹூப்பள்ளி: ஹூப்பள்ளியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல நடித்து, தங்க நகை வியாபாரியிடம் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்த நான்கு பேர், உத்தரபிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். கேரளாவை சேர்ந்தவர் சுதீன். இவர், நகைக்கடைகளுக்கு நகைகள் சப்ளை செய்யும் தொழில் செய்கிறார். கடந்த மாதம், 15ம் தேதி நகைகள் வாங்குவதற்காக, தனது கடையில் பணிபுரியும் பணியாளர் விவேக்குடன் மங்களூரு வந்தார். 3.2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கிய பின், இருவரும் ஹூப்பள்ளி வந்தனர். ஹூப்பள்ளி பழைய பஸ் நிலையம் எதிரேயுள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர். பின், 19ம் தேதி தார்வாட் சென்று விட்டு, காரில் ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஹூப்பள்ளி நீலிஜின் சாலையில், இவர்களின் காரை மறித்த ஐந்து பேர், தங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்து, அடையாள அட்டையை காண்பித்தனர்; ஹிந்தியில் பேசினர். 'நீங்கள் சட்டவிரோதமாக தங்கம் கடத்துவதாக தகவல் வந்துள்ளது. விசாரிக்க வேண்டும் வாருங்கள்' எனக்கூறி அழைத்துச் சென்றனர். பறிப்பு பெலகாவியின் கித்துார் அருகே, விவேக்கை காரில் இருந்து இறக்கி விட்டனர். சுதீனை எம்.கே.ஹூப்பள்ளி சாலைக்கு அழைத்துச் சென்று, அவரை மிரட்டி, மொபைல் போனை பறித்து, சிம் கார்டை எடுத்துக் கொண்டனர். அவரை தாக்கி நகைகள் இருந்த பையையும் பறித்து தப்பினர். இதுகுறித்து, ஹூப்பள்ளி நகர் போலீசார் விசாரித்தனர். பின்னர், இவ்வழக்கு சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். சுதீன் வந்த காரின் நம்பர், கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரிக்கப்பட்டது. விசாரணையில் கொள்ளை கும்பல், உத்தரபிரதேச மாநிலத்தில் இருப்பதாக தகவல் கிடைத்து. கைது இதையடுத்து, உ.பி.,யின் கோரக்பூருக்கு போலீசார் சென்றனர். அங்கு உல்லாச வாழ்க்கை அனுபவித்து வந்த நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 56.26 கிராம் தங்க நகைகள், 60,000 ரூபாய், ஏழு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கைதானவர்கள் மும்பையை சேர்ந்த அங்குஷ் கடம், சந்திரசேகர், விலாஸ் மோஹிதே, குஜராத்தை சேர்ந்த ஜிங்கேஷ் குமார் என தெரியவந்தது. மீதி பணம், நகைகள், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.