நிதி வருவாய் அதிகரித்தால் மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம்: பசவராஜ ராயரெட்டி
கொப்பால் : ''மாநிலத்தின் நிதி வருவாய் அதிகரித்தால், மாணவியர் போன்று, மாணவர்களுக்கும் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும்,'' என, முதல்வரின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ ராயரெட்டி தெரிவித்தார்.கொப்பால் மாவட்டம், எல்புர்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி:கர்நாடகாவில் அடுத்த மூன்று ஆண்டுகளும் சித்தராமையாவே முதல்வராக தொடருவார். இதில் எந்தவித மாற்றமும் இல்லை. மாநிலத்தின் நிதி வருவாய் அதிகரித்தால், மாணவியர் போன்று, மாணவர்களுக்கும் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும்.இரண்டு ஆண்டு கால சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில், பல மக்கள் நலத் திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. கல்வித் துறையில், அமைச்சர் மது பங்காரப்பா சிறப்பான பணிகளை செய்துள்ளார். சமீபத்தில் கூட 16 உயர்நிலைப் பள்ளிகள், ஏழு பி.யு., கல்லுாரிகள் துவங்கப்பட்டு உள்ளன. 500 கர்நாடக பப்ளிக் பள்ளிகள் துவங்கப்பட்டுஉள்ளன.அவரின் பணி என்னை கவர்ந்துள்ளது. அவர் சரியாக பணியாற்றவில்லை என்றால், அவரை கண்டித்திருப்பேன். யார் என்ன சொன்னாலும், அவரை குறை சொல்ல மாட்டேன். அவரின் தலைமுடி, அவர் அணியும் உடை குறித்து பேசுவோர், அவர் செய்துள்ள பணியை பார்த்து பேசவும்.என் தொகுதிக்கு மூன்று பள்ளிகள் கேட்டால், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொகுதிக்கு இரண்டு பள்ளிகள் கிடைக்கும். அவர்களிடம் ஒருதலைபட்சமாக எங்கள் அரசு நடந்து கொள்ளாது.மாநிலத்தில் நிதி பற்றாக்குறை இல்லை. கல்வித்துறைக்கு மட்டுமே, 42 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசின் நிலுவையில் உள்ள தொகை மட்டும், 2 லட்சம் கோடி ரூபாய். ஆனாலும், மாநிலத்தை நிர்வகித்து வருகிறோம்.நடப்பாண்டு 4.09 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்ததே, மாநிலத்தில் நிதி நிலைமை சீராக உள்ளது என்பதற்கு சாட்சி. என் தொகுதி மேம்பாட்டுக்கு நிதி என்று நகைச்சுவைக்காக கூறியதை, ஊடகத்தினர் பெரிதாக்கி, தேசிய செய்தியாக்கி விட்டனர். நான் அமைச்சராவேனா என்று தெரியாது. ஆனால், அனைத்து விதத்திலும் எனக்கு சித்தராமையா ஆதரவாக நிற்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.