பெங்களூரு: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அமைதியான முறையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாதபடி கொண்டாடும் வகையில், கர்நாடக அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இது குறித்து பெங்களூரு நகர் போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங், நேற்று பிறப்பித்த உத்தரவு: விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. பெங்களூரு, பெலகாவி, ஹூப்பள்ளி உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் உற்சவம் நடத்தப்படும். இவ்வேளையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல், அமைதியான முறையில், பண்டிகை கொண்டாட வேண்டும். சட்டம் - ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது என, அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்த கூடாது. இதற்காக போலீஸ் துறை கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறினால், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்கள், சாலைகளில் விநாயகர் சிலை அமர்த்த, போலீஸ் துறையிடம் அனுமதி பெறுவது கட்டாயம். போக்குவரத்துக்கு இடையூறு செய்வது, விதிமீறலாக பந்தல் போடுவது, ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி இல்லை. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமர்த்தும் சங்கங்கள், அமைப்புகள் முறைப்படி, விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இதற்காக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு போலீஸ் துறை, பெஸ்காம் மற்றும் தீயணைப்பு படையிடம் ஒப்புதல் பெற, வசதி செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகளை காப்பாற்றுவது, அரசின் பொறுப்பாகும். பெங்களூரு உட்பட எந்த நகரத்திலும் நீர் நிலைகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், பி.ஓ.பி., எனும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே, பொதுமக்கள் களி மண்ணால் தயாரிக்கப்பட்ட சிலைகளை மட்டுமே, பயன்படுத்த வேண்டும் என ஏற்கனவே கர்நாடக மாசுக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பண்டிகை நேரத்தில் ஒலி பெருக்கி பயன்படுத்துவது, பந்தல் போடுவது, ஊர்வலம், சிலை கரைப்பது தொடர்பாக, நிர்ணயித்த நேரத்தை பின்பற்ற வேண்டும். மின் விபத்துகள் நடக்காமல், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஊர்வல நேரத்தில் மின் கம்பிகளை மேலே துாக்குவது அல்லது பாதைகளுக்கு அபாயத்தை ஏற்படுத்துவதோ கூடாது. மைக்குகள், ஒலி பெருக்கி பயன்படுத்தும் விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்ற வேண்டும். போலீசார் நிர்ணயித்த பாதைகளில் ஊர்வலம் நடத்த வேண்டும். போலீசார் கண்காணிப்பர். அனுமதி பெறாமல், விதிமீறலாக பொது இடங்களில், விநாயகர் சிலைகளை அமர்த்துவது, பி.ஓ.பி., சிலைகளை பயன்படுத்துவது, போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவது தெரிந்தால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நேரடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.