உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பைரதி பசவராஜ் மீதான கோகா சட்டம் ரத்து; உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு

 பைரதி பசவராஜ் மீதான கோகா சட்டம் ரத்து; உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு

பெங்களூரு: கொலை வழக்கில் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் மீது, 'கோகா' சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை ரத்து செய்த, கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது. பெங்களூரு பாரதிநகர் ரவுடி சிவகுமார் என்ற பிக்லு சிவா கொலை வழக்கில், கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் தலைமறைவாக உள்ளார். கைதில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கேட்டு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இரு நீதிமன்றத்திலும் இவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் ஒரே ஆறுதலாக பைரதி பசவராஜ் மீது, 'கோகா' சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை, உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனால் எம்.எல்.ஏ., சற்று நிம்மதி அடைந்து இருந்தார். ஆனால், இதற்கும் காங்கிரஸ் அரசு ஆப்பு வைத்து உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, வழக்கை விசாரிக்கும் சி.ஐ.டி.,க்கு அனுமதி வழங்கி, உள்துறை நேற்று உத்தரவிட்டு உள்ளது. விரைவில் சி.ஐ.டி., போலீசார் மேல்முறையீடு செய்ய உள்ளனர். 'கோகா' என்பது, கர்நாடக ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கட்டுப்பாட்டு சட்டம் என்பதன் சுருக்கம். இந்த சட்டத்தின் கீழ் ஒருவர் மீது வழக்குப் பதிவானால் அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது. ஜாமினும் எளிதில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி