| ADDED : டிச 03, 2025 06:41 AM
ஷிவமொக்கா: கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சுக்கு கீழே, நாட்டு வெடிகுண்டு வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த பஸ், மின்சார டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை. ஷிவமொக்கா மாவட்டம் முடபாசித்தாபுராவில் இருந்து ஷிகாரிபுராவிற்கு, நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் சென்று கொண்டிருந்தது. ஷிகாரிபுராவின் ஹிரேகலவட்டி கிராமம் அருகே செல்லும் போது, பஸ்சின் அடிப்பகுதியில் பயங்கர சத்தம் எழுந்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை ஓரத்தில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் நான்கு பயணியர் மட்டுமே இருந்தனர். அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. இந்த விபத்து நடப்பதற்கு ஏழு நிமிடங்களுக்கு முன் தான், இந்த பஸ்சில் பயணித்த, 45 பள்ளி மாணவர்கள் முந்தைய பஸ் நிறுத்தத்தில் இறங்கினர். ஷிகாரிபுரா கிராம பகுதிகளில், பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகளை விரட்டுவதற்காக, இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்துகின்றனர். அப்படி நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து செல்லும் போது, சாலையில் தவறி விழுந்த வெடிகுண்டு மீது, பஸ் ஏறியதால் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஷிகாரிபுரா ரூரல் போலீசில், பஸ் ஓட்டுநர் பசவராஜ் புகார் அளித்து உள்ளார்.