| ADDED : டிச 05, 2025 08:55 AM
பெங்களூரு: பெங்களூரு மாரத்தஹள்ளி முனேகொலலுவை சேர்ந்தவர் டாக்டர் கிருத்திகா ரெட்டி, 28. கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி இறந்தார். இவரது உடலில் அளவுக்கு அதிகமாக, மயக்க ஊசி செலுத்தி கொலை செய்த, கணவரான டாக்டர் மகேந்திர ரெட்டி கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் உள்ளார். கிருத்திகா ரெட்டி கொலை சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கில் இருந்து மகேந்திர ரெட்டி தப்பித்து விடாமல் இருக்க, அரசு தரப்பில் வக்கீல் நியமிக்கப்பட வேண்டும் என்று, கிருத்திகா குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று கொண்ட அரசு, வழக்கில் வாதாட உயர் நீதிமன்ற வக்கீல் பிரசன்ன குமாரை நியமித்து நேற்று உத்தரவிட்டது. நேர்மையான வக்கீல் என்று பெயர் எடுத்துள்ள பிரசன்ன குமார், சி.பி.ஐ., மற்றும் என்.ஐ.ஏ., வக்கீலாகவும் உள்ளார். ரேணுகாசாமி கொலை வழக்கிலும் அரசு சார்பில் வாதாடுகிறார்.