உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மழைக்கால சட்டசபை கூட்டத்தை சந்திக்க அரசு... தயார்! எதிர்க்கட்சியினரை சமாளிக்க முதல்வர் வியூகம்

மழைக்கால சட்டசபை கூட்டத்தை சந்திக்க அரசு... தயார்! எதிர்க்கட்சியினரை சமாளிக்க முதல்வர் வியூகம்

பெங்களூரு: கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி துவங்க உள்ளது. எதிர்க்கட்சிகளை சமாளிக்க முதல்வர் சித்தராமையா வியூகம் வகுக்கிறார். இது குறித்து, வரும் 12ம் தேதி காங்., - எம்.எல்.ஏ.,க்களுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர், வரும் 11ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடக்கிறது. அரசுக்கு எதிராக பல பிரச்னைகளுடன் குடைச்சல் கொடுக்க, எதிர்க்கட்சிகள் ஆர்வமாக காத்திருக்கின்றன. காங்கிரசில் எழுந்துள்ள உட்கட்சி பூசல், முதல்வர் மாற்றம் விவகாரம், அமைச்சர்களின் சர்சை பேச்சு, முதல்வர் பதவி கிடைக்கவில்லை என, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்தது, அதிகரிக்கும் விவசாயிகளின் தற்கொலைகள், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானது என, லட்டு போன்ற அஸ்திரங்கள் எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்துள்ளன. இவற்றை பயன்படுத்த, எதிர்க்கட்சிகள் தயாராகின்றன. இதையறிந்துள்ள முதல்வர் சித்தராமையா, எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க வியூகம் வகுத்துள்ளார். இது குறித்து, ஆலோசனை நடத்த வரும் 12ம் தேதி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அன்று மாலை பெங்களூரு தனியார் ஹோட்டலில் நடக்கவுள்ள கூட்டத்தில், தவறாமல் பங்கேற்கும்படி எம்.எல்.ஏ.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளார். சட்டசபையில் என்னென்ன விஷயங்களை, எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக பயன்படுத்த கூடும், இதற்கு ஆளுங்கட்சி சார்பில் எப்படி பதிலடி கொடுப்பது என்பது குறித்து, எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். சமீபத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் சித்தராமையா, சட்டசபை கூட்டம் குறித்தும் கருத்துகள் கேட்டறிந்தார். அதேபோன்று, ஆகஸ்ட் 12ல் நடக்கும் கூட்டத்திலும், எதிர்க்கட்சிகளை எப்படி சமாளிப்பது என, முதல்வர் ஆலோசனை கூறுவார். 'தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு, நமது வாக்குறுதி திட்டங்கள் காரணம் அல்ல. 'முந்தைய பா.ஜ., அரசின் தவறுகளே காரணம் என்பதை, சுட்டிக்காட்டுங்கள். வருவாய் பெறுவதில் கர்நாடகா முதலிடத்தில் இருப்பது, நமது அரசின் வாக்குறுதி திட்டங்களை, பா.ஜ., ஆட்சியில் உள்ள மாநிலங்கள் காப்பி அடிப்பது. 'ஓட்டுகள் திருடியது போன்ற விஷயங்களை விவாதித்து, எதிர்க்கட்சியினர் வாயை அடைக்க வேண்டும். அரசின் சாதனைகளை ஆவணங்களுடன் விவரித்து, பா.ஜ.,வுக்கு பதிலடி தாருங்கள். சட்டசபைக்கு வரும் போது, தேவையான தகவல்களுடன் வாருங்கள். அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படாமல் பார்த்து கொள்ளுங்கள்' என, எம்.எல்.ஏ.,க்களுக்கு, முதல்வர் சித்தாமையா அறிவுறுத்துவார் என, அரசு வட்டாரங்கள் தெரிவி க்கின்றன. இதற்கிடையே எதிர்க்கட்சிகளும், சட்டசபையில் அரசை திணறடிக்க தயார் நிலையில் உள்ளன. வழக்கம் போன்று இம்முறையும், சட்டசபை, மேல்சபையில் காரசார வாக்குவாதம், கூச்சல், குழப்பம், வெளிநடப்பு, காகிதங்களை கிழித்தெறிவது, ஒருவரை ஒருவர் வசைமாரி பொழிவது என, அனைத்தையும் எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை