சவுந்தட்டியில் கொட்டி தீர்த்த கனமழை எல்லம்மா கோவிலை சுற்றி வெள்ளம்
பெலகாவி : சவுந்தட்டியில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால், எல்லம்மா தேவி கோவிலை சுற்றி, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்நாடகாவின் வடக்கு உள்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டு உள்ள, காற்று சுழற்சி காரணமாக வடமாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெலகாவி மாவட்டம் பெலகாவி, கோகாக், அரபாவி, சவுந்தட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்கிறது. சவுந்தட்டி நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணி முதல் நேற்று காலை 6:00 மணி வரை 11.40 செ.மீ., கனமழை கொட்டித் தீர்த்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எல்லம்மா கோவிலை சுற்றி கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பக்தர்களுக்கு கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டது. சித்தனகொல்லா, சங்கப்பனகொல்லா, பஜார் மார்க், கடகோலா சதுக்கம் பகுதியில் சாலையில் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கிநின்றது. பாகல்கோட் மாவட்டம், பாதாமி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையால், சிறிய ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குலகேரி கிராமத்தில் பருத்தி பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதுபோல விஜயபுரா டவுன் ராஜாஜிநகர், ராம்நகரில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றதால், மக்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. பசவனபாகேவாடி, தாலிகோட், சிந்தகி உள்ளிட்ட தாலுகாக்களிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. கோலார், சித்ரதுர்கா, துமகூரு, ராம்நகர், சாம்ராஜ்நகர், மாண்டியா, மைசூரு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.