முதல்வர் மனைவிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
பெங்களூரு: 'முடா' வழக்கில் முதல்வர் மனைவி, அவரது சகோதரர், டி.ஜி.பி., மைசூரு விஜயநகர் போலீஸ் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.'முடா' முறைகேட்டில், முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர, கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை, 2024 செப்., 24ல் கர்நாடக உயர் நீதிமன்ற தனி நீதிபதி உறுதி செய்தார். ஒரு மாதத்துக்கு பின், இந்த உத்தரவை எதிர்த்து, முதல்வர் சித்தராமையா மேல்முறையீடு செய்தார்.முதல்வர் மீது விசாரணை நடத்த, தனி நீதிபதி உத்தரவிட்டு பத்து மாதங்களாகியும், இன்னும் விசாரணை துவங்கவில்லை.இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி காமேஸ்வர ராவ், நீதிபதி ஜோஷி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:வழக்கில் சி.பி.ஐ., விசாரணை கோரி, ஸ்நேகமயி கிருஷ்ணா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், பார்வதிக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. தன் மீது விசாரணை தொடர பிறப்பித்த கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி, நில உரிமையாளர் தேவராஜு, மேல்முறையீடு செய்திருந்தார். முதல்வரின் மனைவி பார்வதி, அவரது சகோதரர் மல்லிகார்ஜுன், மாநில டி.ஐ.ஜி., மைசூரு விஜயநகர் போலீஸ் நிலைய அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இவ்வழக்கு விசாரணை, செப்டம்பர் 4ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.