மேலும் செய்திகள்
பிரஜ்வல் ஜாமின் 24க்கு ஒத்திவைப்பு
21-Jun-2025
பெங்களூரு: வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், விசாரணை நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமின் மனுத் தாக்கல் செய்ய ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். இவர் மீதான விசாரணை, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது.இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிரஜ்வல் மேல்முறையீடு செய்தார். அங்கும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணை நடந்து வந்தது.விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'இரண்டாவது முறையாக ஜாமின் கேட்டு, விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்வு கூறி உள்ளது. எனவே, உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்க வேண்டும்' என்றார்.இதற்கு அரசு தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, முதலில் விசாரணை மன்றத்தில் தான் ஜாமின் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அங்கு கிடைக்கவில்லை என்றால் மட்டுமே, உயர் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்று கூறி உள்ளது. ஆனால் இரண்டாவது முறையாக நேரடியாக உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மனுதாரர் மீது தீவிரமான குற்றச்சாட்டு வழக்குப் பதிவாகி உள்ளது. அவருக்கு ஜாமின் வழங்கினால், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இம்மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ண குமார், ''மனுதாரர் முதலில் விசாரணை நீதிமன்றத்தில் தான் ஜாமின் கேட்டு மனுத் தாக்கல் செய்திருக்க வேண்டும். அடுத்த பத்து நாட்களில், விசாரணை நீதிமன்றம், ஜாமின் மனு மீதான நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு ஜாமின் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே, உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்யலாம்,'' என்றார்.
21-Jun-2025