உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நடைமுறை தடை செய்ய மாநில அரசுக்கு ஐகோர்ட் கறார் உத்தரவு

மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நடைமுறை தடை செய்ய மாநில அரசுக்கு ஐகோர்ட் கறார் உத்தரவு

பெங்களூரு: மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நடைமுறைக்கு அதிருப்தி தெரிவித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அத்தகைய பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்துமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.அகில இந்திய மத்திய தொழிலாளர் சங்க கவுன்சிலின் கர்நாடக பிரிவு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தது.இதில், 'கழிவுகளை அகற்ற நவீன இயந்திரங்கள் இருந்தும், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, மனிதர்களை பயன்படுத்தும் நடைமுறைக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தனர்.இம்மனுவை, தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் நீதிபதி காமேஸ்வர ராவ், நீதிபதி ஜோஷி ஆகியோர் விசாரித்து வந்தனர்.விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வக்கீல் முன்வைத்த வாதம்:மலம் எடுத்துச் செல்லும் வழக்கம் தடை செய்யப்பட்ட போதும், அது வேறு விதமாக கையாளப்படுவது வேதனை அளிக்கிறது. இதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். இச்செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க வேண்டும்.ஏற்கனவே தடை உத்தரவு இருந்தபோதும், அரசு எந்த வழிகாட்டுதல்களையும் வகுக்கவில்லை. இது தொடர்பாக கிரேட்டர் பெங்களூரு ஆணையம் பதிலளிக்கவில்லை. எனவே, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மாநில அரசு பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.நீதிபதிகள், 'தற்போது பெங்களூரில் கழிவு மேலாண்மை மையங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? கையால் மலம் அள்ளும் நடைமுறை இன்னும் தொடர்கிறதா?' என்றனர்.மனுதாரர் வக்கீல் வாதத்தின்போது, 'பெங்களூரில் இந்த நடைமுறை வேறுவிதமாக நடந்து வருகிறது. கழிவு தொட்டியை சுத்தம் செய்யும்போது இரண்டு பேர் இறந்தது குறித்து, மனுவில் குறிப்பிட்டுள்ளோம்' என்றார்.

உத்தரவு

நேற்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:கர்நாடகாவில் உள்ள அனைத்து தொழில் துறை, குடியிருப்பு பகுதிகளிலும் எஸ்.டி.பி., எனும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் பராமரிப்பு குறித்து, நான்கு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.மாநிலம் முழுதும் கழிவுநீர், சுத்திகரிப்பு நிலையங்களை இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.மனிதர்களால் நிலத்தடி சாக்கடையை சுத்தம் செய்யும் செயல்முறையை, முற்றிலுமாக நிறுத்தி, தொழிலாளர்களின் இறப்பை தடுக்க வேண்டும்.இயந்திரங்களை பயன்படுத்துவதற்கான செலவு அதிகம் என்பதற்காக, மனிதர்களை பயன்படுத்துவது சரியல்ல.கிரேட்டர் பெங்களூரு ஆணைய அதிகாரிகளும், நகர்ப்புற மேம்பாட்டு துறை, சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒன்றிணைந்து, இப்பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடியிருப்பு வளாகங்களில், தனித்தனி கழிவுநீர் குழாய்கள் இருக்க வேண்டும். அவற்றின் துாய்மை குறித்து வழிகாட்டுதல்கள் அல்லது சட்டப்பூர்வ வழிமுறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

ந ட வ ட ிக்க ை

மாநில அரசு விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதர்கள் சுத்தம் செய்வதை குறைத்து, இறப்பு சம்பவங்களை குறைக்க வேண்டும்.கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஒரு கண்காணிப்பு அமைப்பு இருக்க வேண்டும். அனைத்து துறைகளும் விவாதித்து செயல்படுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும்.பயிற்சி பெற்ற நபர்கள், இவ்வேலைக்கு முன்வருவதில்லை. மாறாக, தினசரி கூலி பெறுவோர் மட்டுமே இதுபோன்ற செயல்களுக்கு பலியாகின்றனர்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை