உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  எம்.எல்.ஏ., ஹரிஷை செருப்பால் அடியுங்கள் அமைச்சர் மல்லிகார்ஜுன் சர்ச்சை பேச்சு

 எம்.எல்.ஏ., ஹரிஷை செருப்பால் அடியுங்கள் அமைச்சர் மல்லிகார்ஜுன் சர்ச்சை பேச்சு

தாவணகெரே: பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷை செருப்பால் அடியுங்கள் என்றும், ஹரிஷின் தாய் குறித்தும் அமைச்சர் மல்லிகார்ஜுன் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாவணகெரே மாவட்டம், ஹரிஹரா தாலுகாவில், கால்நடை மருத்துவமனை திறப்பு விழாவில் தோட்டக்கலை அமைச்சர் மல்லிகார்ஜுன் நேற்று முன்தினம் பங்கேற்றார். அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பத்ரா அணையிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி அவரிடம் மனுக்கள் அளித்தனர். அப்போது, 'ஹரிஹரா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் அண்ணாவிடம் அணையிலிருந்து தண்ணீர் திறக்க மனுக்கள் அளித்தேன். அவர் தான் உங்களிடம் முறையிடும் படி அறிவுறுத்தினார்' என, விவசாயி ஒருவர் கூறினார். இதை கேட்டதும் கடுப்பாகிய அமைச்சர் மல்லிகார்ஜுன், ஹரிஷின் தாய் குறித்து அவதுாறாக பேசினார். மேலும், 'அவனை செருப்பால் அடியுங்கள். அவனையெல்லாம் அண்ணா என அழைக்காதே' என ஆவேசமாக பேசினார். அவர் பேசும் வீடியோ, நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சரின் பேச்சை கண்டித்து, பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா கூறியதாவது: தாவணகெரே பொறுப்பு அமைச்சர் மல்லிகார்ஜுன் பொறுப்பில்லாமல் பேசி வருகிறார். ஹரிஷ் குறித்தும், அவரது தாய் குறித்தும் அவதுாறாக பேசியதற்கு காலம் பதில் அளிக்கும். இது, ஹரிஹரா தொகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம். அதிகாரம் கையில் இருப்பதால், ஆணவமாக பேசக்கூடாது. இதையெல்லாம் மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கின்றனர். அவர்கள் நிச்சயம் முடிவு கட்டுவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை