ரசாயனம் கலந்த மாம்பழங்கள் தோட்டக்கலை துறை எச்சரிக்கை
பெங்களூரு: 'உடல் ஆரோக்கியத்துக்கு, அபாயத்தை ஏற்படுத்தும் கால்சியம் கார்பைட் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், மார்க்கெட்டுக்கு வந்துள்ளன. மக்கள் கவனமாக மாம்பழங்களை வாங்க வேண்டும்' என, தோட்டக்கலை துறை எச்சரித்துள்ளது.இது குறித்து, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சமீப ஆண்டுகளாகவே, கால்சியம் கார்பைட் பயன்படுத்தி, மாம்பழங்களை பழுக்க வைத்து, விற்பனை செய்வது அதிகரிக்கிறது. ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிட்டால், மக்களுக்கு நீரிழிவு, புற்றுநோய் ஏற்படும் என்பது, சமீபத்தில் நடந்த ஆய்வில் உறுதியானது.இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் வரத்து மிகவும் குறைவு. குறுக்கு வழியில் பழங்களை பழுக்க வைத்து, மார்க்கெட்டில் விற்கின்றனர். எனவே, பொது மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். பழங்கள் வாங்கும் போது, உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.இயற்கையாக பழுத்த பழங்கள்; ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். கார்பைடு பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள், ஒரே வடிவத்திலும், ஒரே நிறத்திலும் இருக்கும். ஆங்காங்கே பச்சை, கருப்பு புள்ளிகள் காணப்படும். மிருதுத்தன்மையை இழந்திருக்கும். வாசம் இருக்காது. நீரில் மிதக்கும். இயற்கையாக பழுத்த பழங்கள் லேசான சிவப்பு, மஞ்சள் நிறத்தில் காணப்படும். மிருதுவாக இருக்கும். நீரில் மூழ்கும். ருசியாகவும், அதிகமான சாறுடன் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.