உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போலீசாருக்கு தலைவலியாகும் ஹைட்ரோ கஞ்சா கடத்தல்

போலீசாருக்கு தலைவலியாகும் ஹைட்ரோ கஞ்சா கடத்தல்

பெங்களூரு: கர்நாடகாவில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த, போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளனர். அவ்வப்போது சோதனை நடத்தி, கிலோ கணக்கில் போதைப் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். ஆனால் ஹைட்ரோ கஞ்சா அதிகரிப்பது, அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. கர்நாடகாவில் போதைப் பொருட்களை ஒழிக்க, போலீசார் அதிகபட்ச நடவடிக்கை எடுத்துள்ளனர். தகவல் கிடைத்தவுடன் அந்தந்த பகுதிகளுக்கு சென்று, சோதனை நடத்துகின்றனர். போதைப் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். இதை விற்பவர்களையும் கைது செய்கின்றனர். ஆனால் இதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. குறிப்பாக ஹைட்ரோ கஞ்சாவை கட்டுப்படுத்துவது, போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இதற்கு முன், கஞ்சா விற்கும் நபர்கள், விவசாயிகளுக்கு பணத்தாசை காட்டி, பயிர்களுக்கு நடுவில் கஞ்சாவை விளைய வைத்து, வாங்குகின்றனர். விவசாயிகளுக்கும் கஞ்சா பயிரிடுவது சட்டப்படி குற்றம் என, தெரியாமல் அதை பயிரிட்டு சட்டத்தின் பிடியில் சிக்குகின்றனர். இது குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: நிலப்பரப்பில் கஞ்சா பயிரிட்டால், போலீசாரிடம் சிக்குவோம் என்ற பீதியில், ஹைட்ரோ கஞ்சா உற்பத்தி செய்கின்றனர். 'ஏசி' அறையில் ஹைட்ரோ கஞ்சா விளைவிக்கின்றனர். நிலத்தில் பயிரிடும் கஞ்சாவை விட, ஹைட்ரோ கஞ்சா மிகவும் அபாயமானது. இதை மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். இது வாசனை வராது என்பதால், கடத்தல்காரர்கள் எளிதாக கடத்துகின்றனர். நடப்பாண்டு ஜனவரி முதல், மே இறுதி வரை, கர்நாடகாவில் 158 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 26 வழக்குகள் பதிவாகி, 46 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். வேறு மாநிலங்களுடன் ஒப்பிட்டால், கர்நாடகாவுக்கு மிக அதிகமான ஹைட்ரோ கஞ்சா கடத்தப்படுவது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2023 முதல் 2025 மே வரை, 49 கடத்தல் வழக்குகள் பதிவாகின. 294 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மருத்துவ தேவைக்காக, அமெரிக்கா, தாய்லாந்து, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா உட்பட, சில நாடுகளில் ஹைட்ரோ கஞ்சா பயிரிட சட்டப்படி அனுமதி உள்ளது. இந்தியாவில் இது சட்டவிரோதம். எனவே அந்த நாடுகளில் இருந்து, கூரியர் மூலமாக கர்நாடகாவுக்கு வரவழைத்து, அதிக விலைக்கு விற்கின்றனர். ஹைட்ரோ கஞ்சாவை கட்டுப்படுத்துவது, போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. 'டார்க்வெப்' போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக, ஆர்டர் செய்து வரவழைக்கின்றனர். எனவே இத்தகைய வலை தளங்களை உன்னிப்பாக கண்காணிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ