உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / என் இலக்கு எனக்கு தெரியும் முதல்வர் பதவி குறித்து சிவகுமார் தெளிவு

என் இலக்கு எனக்கு தெரியும் முதல்வர் பதவி குறித்து சிவகுமார் தெளிவு

பெங்களூரு: “என் இலக்கு எது என்பது எனக்கு தெரியும். இப்போதைக்கு எனக்கு முதல்வர் ஆகும் அவசரம் இல்லை. என்னை பற்றி அவதுாறு பரப்பினால் வழக்கு தொடருவேன்,” என, துணை முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார். பெங்களூரு லால்பாக் தாவரவியல் பூங்காவில் நேற்று காலை, துணை முதல்வர் சிவகுமார் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். நடைப்பயிற்சிக்கு வந்தவர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். மக்கள் சொத்து அப்போது சிவகுமார் பேசியதாவது: பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஹெப்பாலில் இருந்து சில்க் போர்டு வரை, சுரங்கப்பாதை அமைக்கிறோம். இந்த பாதை அமைவதால், லால்பாக் பூங்காவின் 6 ஏக்கர் நிலத்திற்கு ஆபத்து என்று, பா.ஜ., தலைவர்கள் சொல்வது பொய். சுரங்கப்பாதை வழியாக வரும் வாகனங்கள் வெளியேற, லால்பாக் அசோகா துாண் அருகே சில பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பணி நடக்கும்போது உபகரணங்களை சேமித்து வைக்க, லால்பாக்கில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை பயன்படுத்த உள்ளோம். பணி முடிந்ததும் உபகரணங்கள் அகற்றப்படும். லால்பாக், நகர மக்களின் சொத்து. சுரங்கப்பாதை பணியால் லால்பாக் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்போம். இங்கு நடைப்பயிற்சிக்கு வரும் மக்கள், அவசர மருத்துவ தேவைக்காக டாக்டர் ஒருவரை பணி அமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். டாக்டர் பணி அமர்த்தப்படுவார். ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். இங்கு வாகன நிறுத்த பிரச்னையை தீர்க்க 10 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்படும். லால்பாக் மாதிரியில் நகரின் பிற பகுதியிலும் பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக வன துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேயுடன் பேசுவேன். இவ்வாறு அவர் பேசினார். 50 சதவீத பெண்கள் பின், சிவகுமார் அளித்த பேட்டி: கிரேட்டர் பெங்களூரு ஆணையம், சுரங்கப்பாதை திட்டத்தை பா.ஜ., எதிர்க்கிறது. அவர்களுக்கு நகரின் வளர்ச்சி தேவை இல்லை. எல்லாவற்றிலும் அரசியல் செய்கின்றனர். கிரேட்டர் பெங்களூரு ஆணையம் வேண்டாம் என்றால், ஆணையத்தின் கீழ் உள்ள மாநகராட்சிகளுக்கு நடக்கும் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று, பா.ஜ., தலைவர்கள் முடிவு எடுக்க வேண்டும். ஐந்து மாநகராட்சியிலும் 369 கவுன்சிலர்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் 50 சதவீதம் பெண்கள் இருப்பர். அவசரப்படவில்லை லால்பாக்கில் நான் நடைப்பயிற்சியில் ஈடுபட்டபோது, என்னை சந்தித்த சிலர், நீங்கள் முதல்வர் ஆகும் நேரம் நெருங்கி விட்டதா என்று என்னிடம் கேட்டனர். சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்தேன். ஆனால் முதல்வர் ஆகும் நேரம் எனக்கு நெருங்கிவிட்டதாக நான் கூறியதாக, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உண்மையை திரித்து செய்தி வெளியிடாதீர்கள். முதல்வர் பதவியை ஏற்க நான் அவசரப்படவில்லை. பொதுமக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வந்து உள்ளேன். மக்களுக்காக இரவு, பகலாக பணியாற்றுகிறேன். கடவுள் வாய்ப்பு உண்மையை திரித்து வெளியிட்டால், ஊடகங்களுக்கு நான் ஒத்துழைக்க மாட்டேன். நிகழ்ச்சிகளுக்கு அழைக்க மாட்டேன். ஊடகங்கள் அரசியல் செய்ய கூடாது. என்னுடைய இலக்கு எது என்பது எனக்கு தெரியும். கடவுள் எனக்கு வாய்ப்பு அளிக்கும்போது, என் பணியை சிறப்பாக செய்வேன். சில ஊடகங்கள், தங்களது நல்ல பணியை விட்டுவிட்டு, சர்ச்சையை உருவாக்க முயற்சி செய்கின்றன. மக்களை ஊடகங்கள் தவறாக வழி நடத்தினால், அவதுாறு வழக்கு தொடருவேன். அமைச்சரவையில் மாற்றம் குறித்து எந்த விவாதமும் இல்லை. ஏதேனும் தகவல் இருந்தால் முதல்வரோ, நானோ வெளியே சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ