உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆண்டுகளும் நானே முதல்வர்!...: சித்தராமையா அதிரடி அறிவிப்பு: வேறு வழியில்லை என சிவா புலம்பல்

காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆண்டுகளும் நானே முதல்வர்!...: சித்தராமையா அதிரடி அறிவிப்பு: வேறு வழியில்லை என சிவா புலம்பல்

பெங்களூரு: 'காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆண்டுகளும் நானே முதல்வர்' என்று, சித்தராமையா அதிரடியாக அறிவித்து உள்ளார். 'எனக்கு வேறு என்ன வழி உள்ளது. முதல்வருக்கு பக்கபலமாக நின்று அவரை ஆதரிக்க வேண்டும்,'' என, துணை முதல்வர் சிவகுமார் புலம்பி உள்ளார்.கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையில், முதல்வர் பதவிக்கு போட்டி உள்ளது. இருவரின் ஆதரவாளர்களும் மாறி, மாறி முதல்வர் பதவி பற்றி பகிரங்கமாக பேசியதால், கடுப்பான காங்கிரஸ் மேலிடம், முதல்வர் பதவி பற்றி யாரும் பேச கூடாது என்று உத்தரவிட்டது.ஆட்சியில் கடந்த இரண்டு வாரங்களாக நிலவும் குழப்பத்தை போக்கும் வகையில், கடந்த 30ம் தேதியும், 1ம் தேதியும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 50 பேருடன், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆலோசனை நடத்தினார்.இதற்கிடையில், ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசைன், 'இன்னும் மூன்று மாதத்தில் சிவகுமார் முதல்வர் ஆவார்' என்று கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார். முதல்வர் மாற்றம் குறித்து விவாதிக்கவே, மேலிட பொறுப்பாளர் வந்திருப்பதாகவும் அரசல், புரசலாக பேசப்பட்டது.

ஆதரவு உள்ளது

இந்நிலையில், சிக்கபல்லாபூர் நந்திமலையில் நேற்று நடந்த சிறப்பு அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பு, முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:முந்தைய பா.ஜ., ஆட்சியில், ஒரு வளர்ச்சி பணி கூட நடக்கவில்லை. நீர்ப்பாசனம், கிராமப்புற மேம்பாடு, பொதுப்பணி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு பா.ஜ., அரசு அளித்த பங்களிப்பு என்ன. நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்து, எதையுமே அவர்கள் செய்யவில்லை.காங்கிரஸ் உடனான கூட்டணி அரசில் குமாரசாமி 14 மாதம் முதல்வராக இருந்தும், அவரும் ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் அரசில் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை என்று பொய் சொல்லி, மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்.ஜனநாயகத்தில் அமைச்சராகும் உரிமை எம்.எல்.ஏ.,க்களுக்கு உண்டு. சுயேச்சை உட்பட எங்களுக்கு 140 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது.ஆனால், 34 பேரை மட்டுமே அமைச்சராக்க முடியும். அமைச்சர் பதவி குறித்து, கட்சி மேலிடம் எடுக்கும் முடிவு இறுதியானது. நவம்பர் மாதம் நான் பதவி விலகுவேன் என்று எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகிறார். ஐந்து ஆண்டுகளும் நானே முதல்வராக இருப்பேன். அசோக், விஜயேந்திரா, சலவாதி நாராயணசாமி எங்கள் கட்சியினர் இல்லை. அவர்கள் பா.ஜ., கட்சிக்காரர்கள். அரசில் அதிகார மாற்றம் குறித்து பகல் கனவு காண்கின்றனர்.

ஆன்லைன் பதிவு

இடைவிடாமல் பொய் பேசி வரும் அவர்களுக்கு, உண்மையை எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.அவர்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். அரசு ஐந்து ஆண்டுகள் பாறை போன்று உறுதியாக இருக்கும்.எஸ்.சி., மக்கள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. சில இடங்களில் கணக்கெடுப்பு நடத்தாமல் ஸ்டிக்கர் ஒட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ஜாதி பெயரை வெளியே சொல்வதில் ஏதாவது சிரமம் இருந்தால் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.பெங்களூரு வருவாய் பிரிவின் அமைச்சரவை கூட்டத்தை, சிக்கபல்லாபூரில் நடத்துகிறோம். பட்ஜெட் திட்டம் குறித்து விவாதம் இருக்கும். மாநிலத்தின் அனைத்து வருவாய் பிரிவுகளிலும் அமைச்சரவை கூட்டம் நடத்தப்படும். பெலகாவி, விஜயபுராவிலும் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.அவசியமில்லை'ஐந்து ஆண்டுகளும் நானே முதல்வர்' என்று சித்தராமையா கூறியது பற்றி, துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:எனக்கு வேறு என்ன வழி உள்ளது. முதல்வருக்கு பக்கபலமாக நின்று அவரை ஆதரிக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் இனி கட்சி மேலிடம் பார்த்து கொள்ளும். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை.கட்சியை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா வந்து உள்ளார். எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தி கருத்து கேட்டு உள்ளார்.முதல்வர் பதவி குறித்து பேசியதால் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசைனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்து உள்ளேன். சித்தராமையா முதல்வராக இருக்கும் போது, என் பெயரை முதல்வர் பதவிக்கு முன்மொழிய வேண்டிய அவசியம் இல்லை.என்னை போன்று லட்சக்கணக்கான தொண்டர்கள், கட்சியை கட்டமைத்து உள்ளனர். தொண்டர்கள் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு முன்பும் ஒரு முறை, 'நானே 5 ஆண்டும் முதல்வர்' என்று சித்தராமையா கூறினார். பின், தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டு, 'மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ