உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சிவகுமாருக்கு முதல்வர் பதவி தராவிட்டால் கர்நாடகாவில் காங்கிரஸ் நாசமாகி விடும்; ஈடிகா சமூக மடாதிபதி சாபம்

 சிவகுமாருக்கு முதல்வர் பதவி தராவிட்டால் கர்நாடகாவில் காங்கிரஸ் நாசமாகி விடும்; ஈடிகா சமூக மடாதிபதி சாபம்

- நமது நிருபர் -: ''சிவகுமாருக்கு முதல்வர் பதவி கிடைக்காவிட்டால், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி நாசமாகி விடும்,'' என, மடாதிபதி பிரணவானந்த சுவாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஈடிகா சமூக மடாதிபதி பிரணவானந்த சுவாமி, டில்லியில் நேற்று அளித்த பேட்டி:

ஈடிகா உட்பட பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த, 13 மடாதிபதிகள், துணை முதல்வர் சிவகுமார், முதல்வராக ஆதரவாக உள்ளனர். கடந்த இரண்டு வாரத்திற்கு முன், சிவகுமாரை அவரது வீட்டில் சந்தித்து எங்கள் ஆதரவை தெரிவித்தோம். பெலகாவியில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் முடிவதற்குள், கட்சி மேலிடத்திடம் இருந்து ஏதாவது பதில் வரும் என்று எதிர்பார்த்தோம். எதுவும் நடக்காததால், நான் தற்போது டில்லி வந்து உள்ளேன். சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்து, சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என்று கடிதம் கொடுக்க உள்ளேன். நிறைய வாய்ப்பு வரும், 26ம் தேதி மேலும் சில மடாதிபதிகள் டில்லி வந்து, காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்திக்க உள்ளனர். எங்களுக்கு பதில் கிடைக்காவிட்டால், வரும், 29 ம் தேதி பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின், 35 மடாதிபதிகள் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்துவோம். காங்கிரசுக்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்ததில், சிவகுமாருக்கு முக்கால்வாசி பங்கு உள்ளது. அவர் மீது சோனியாவுக்கு நம்பிக்கை உள்ளது. சிவகுமார் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்தே ஆக வேண்டும். அவருக்கு கடவுள் நம்பிக்கையும் அதிகம். காங்கிரஸ் மேலிட எதிர்ப்பையும் மீறி, கும்பமேளாவில் கலந்து கொண்டார். அவருக்கு முதல்வர் பதவி கிடைக்காவிட்டால், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி நாசமாகி விடும். தேசிய அளவில் அஹிந்தா சமூக தலைவராக சித்தராமையா உள்ளார். அவருக்கு அரசியலில் நிறைய வாய்ப்பு கிடைத்து உள்ளது. முற்றுப்புள்ளி இரண்டு முறை முதல்வராக இருந்துள்ளார். துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். வேறு ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தே ஆக வேண்டும். இதுவரை ஏழரை ஆண்டுகள் முதல்வராக இருந்து, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு என்ன செய்தார் என்பதை, அவர் சொல்ல வேண்டும். மடாதிபதிகள் அரசியல் பேசக்கூடாது என்று, அரசியலமைப்பில் கூறவில்லை. தேர்தல் நேரத்தில் எங்களை தேடி வந்து ஆசி கேட்கின்றனர். நாங்கள் அரசியல் பேசக்கூடாதா? நாங்கள் பிரச்னையை ஏற்படுத்தவில்லை. 2023 தேர்தலில் வெற்றி பெற்ற பின், டில்லியில் என்ன பேச்சு நடந்தது என்பது மேலிடத்திற்கு தான் தெரியும். தற்போது கர்நாடகாவில் நிலவும் முதல்வர் பதவி குழப்பத்திற்கு, காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை