அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா பதவியை பறிக்க காங்கிரசில் சதி? நில அபகரிப்பு புகாரில் சிக்கியவருக்கு கல்தா கொடுக்க திட்டம்
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வருவாய் துறை அமைச்சராக கிருஷ்ணபைரே கவுடா உள்ளார். இவர், பெங்களூரு பேட்ராயனபுரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆவார். வருவாய் துறை அமைச்சராக இவர் பொறுப்பு ஏற்றதில் இருந்தே, தனது துறையில் பல மாற்றங்களை செய்து வருகிறார். இதற்காக, அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் உள்ளார். கடந்த மாதம் ஹாசனம்பா கோவில் நடை திறந்த போது, பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இவர் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டு பெற்றன. இதனால் முதல்வரின், 'குட் புக்' கில் இடம் பிடித்தார். தாத்தா நிலம் இந்நிலையில், கோலார் தாலுகா நரசபுரா கருடனபாளையா கிராமத்தில் 21 ஏக்கர் ஏரி, மயான நிலத்தை ஆக்கிரமித்ததாக கிருஷ்ணபைரே கவுடா மீது பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர், அந்த 21 ஏக்கர் நிலமும் தனது தாத்தாவுக்கு உரியது என்றும், தற்போது தனது பெயரில் உள்ளதாகவும் கூறினார். தேவைப்பட்டால் லோக் ஆயுக்தா விசாரிக்கட்டும், எந்த விசாரணைக்கும் தயார் என்றும் கூறி இருந்தார். இந்நிலையில், கிருஷ்ணபைரே கவுடாவை நில அபகரிப்பு புகாரில் சிக்க வைக்க, காங்கிரசிலேயே சதி நடக்கிறதா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இதற்கு காரணம், கோலாரின் பங்கார்பேட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமி, கோலார் தாசில்தாருக்கு எழுதியதாக கூறப்படும் கடிதம், சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பது தான். முழு தகவல் அந்த கடிதத்தில், 'கோலார் தாலுகா நரசபுரா அருகே கருடனபாளையா கிராமத்தின் மொத்த பரப்பளவு என்ன. அங்கு எவ்வளவு ஏக்கர் நிலம் உள்ளது. நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன. பொது நலனுக்காக முழுமையாக தகவல் வழங்க வேண்டும்' என்று கூறப்பட்டு உள்ளது. இந்த கடிதத்தின் மூலம் தகவல் பெற்று, கிருஷ்ணபைரே கவுடாவுக்கு உள்ள நிலம் தொடர்பாக, பா.ஜ.,வினருக்கு, நாராயணசாமியே தகவல் வழங்கி இருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. ஆனாலும், கிருஷ்ணபைரே கவுடாவுக்கு எதிராக, காங்கிரசில் சதி நடப்பதாக பேச்சு அடிபடுகிறது. நில அபகரிப்பு புகாரை வைத்து, அவருக்கு எதிராக வேலை செய்து, அமைச்சர் பதவியில் இருந்து அவருக்கு, 'கல்தா' கொடுக்க, கட்சிக்குள்ளேயே சிலர் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கிருஷ்ணபைரே கவுடா முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்; நாராயணசாமி சிவகுமாரின் ஆதரவாளராக உள்ளார். முதல்வரிடமும், கட்சி மேலிடத்திடமும் நல்ல பெயர் எடுத்துள்ள, கிருஷ்ணபைரே கவுடாவுக்கு ஆப்பு வைக்க, துணை முதல்வர் அணி ஏதாவது முயற்சி செய்ததா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.
நான் எழுதவில்லை!
இதுகுறித்து, நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி: கோலார் தாசில்தாருக்கு, எனது பெயரிலான லெட்டர் பேடில் எழுதப்பட்ட கடிதம், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நான் அந்த கடிதத்தை எழுதவே இல்லை. கோலார் தாசில்தாருக்கு கடிதம் எழுத எனக்கு என்ன அவசியம் உள்ளது. எனது லெட்டர்பேட் தவறாக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடாவுடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. தனிப்பட்ட முறையில் நான் அவரை விமர்சித்து பேசியது இல்லை. நான் அவரது நிலத்திற்கு சென்றது இல்லை. அவரும் எனது நிலத்திற்கு வந்தது இல்லை. வருவாய் துறை முதன்மை செயலர் ராஜேந்திர கட்டாரியா மீது எனக்கு கோபம் இருந்தது. தனக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகள், பொது மக்களை துன்புறுத்தியதால் அவருக்கு எதிராக சட்டசபையில் பேசினேன். அவரை அந்த பதவியில் இருந்து மாற்றுவதற்காக, எம்.எல்.ஏ.,க்களின் கையெழுத்துகளை பெற்றேன். இவ்வாறு அவர் கூறினார்.