ஐ.டி., நிறுவனங்கள் வெளியேறாது சங்க பொது செயலர் திட்டவட்டம்
பெங்களூரு : ''பெங்களூரில் இருந்து வெளியேற, எந்த ஐ.டி., நிறுவனமும் விரும்பவில்லை,'' என்று, கிரேட்டர் பெங்களூரு ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் தொழில் சங்க பொது செயலர் கிருஷ்ணகுமார் கூறினார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: சாலை பள்ளம் பிரச்னையால், பெங்களூரில் இருந்து வெளியேற போவதாக பிளாக்பக் நிறுவன சி.இ.ஓ., ராஜேஷ் கூறவில்லை. தனது அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற போவதாக கூறி உள்ளார். பெங்களூரில் இருந்து வெளியேற, எந்த ஐ.டி., நிறுவனமும் விரும்பவில்லை. வெளியேற நினைத்தால், பெங்களூரில் கால் பதிக்க மாட்டார்கள். இந்தியாவின் தொழில்நுட்ப நகரமாக பெங்களூரு உள்ளது. இது உலகின் கவனத்தை ஈர்த்து உள்ளது. இங்கு 65,000 தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. 25 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். கலிபோர்னியாவை விட பெங்களூரில் தான் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம். ஐ.டி., நிறுவனங்கள் எண்ணிக்கைக்கு ஏற்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சாலை பள்ளங்களை நிர்வகிக்க, அரசு முறையான செயல் திட்டத்தை பின்பற்ற வேண்டும். பிளாக்பக் நிறுவனம் அமைந்துள்ள வெளிவட்ட சாலை, போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்கிறது. இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. 10 லட்சம் பேர் பணி செய்கின்றனர். நகரின் வருமானத்தில் 30 சதவீதம் இங்கிருந்து கிடைக்கிறது. இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல நிறுவனங்கள் பெங்களூரில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு தேவையான அடிப்படை வசதி, உள்கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சாலை பள்ளம் குறித்து அதிகாரிகளுடன், முதல்வர் சித்தராமையா ஆலோசித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.