பெங்களூரில் திருடப்பட்ட நகைகள் திருவாரூரில் மீட்பு
கர்நாடக போலீசார், தமிழகத்தின் திருவாரூர் நகை கடைகளில் சோதனை நடத்தி, 420 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.பெங்களூரு நகரில், வீடு ஒன்றில் 1,300 கிராம் தங்க நகைகள் திருட்டு போய் உள்ளது. இதில் தொடர்பு உடையவர்களை, கர்நாடக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில், திருவாரூரில் நகைகளை விற்றதாக தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, கர்நாடக போலீசார், நேற்று முன்தினம், திருவாரூர் வந்து, நகைக்கடை ஒன்றில், திருட்டு நகைகள் வாங்கியது குறித்து விசாரித்துள்ளனர். இதை அறிந்த தொலைக்காட்சி நிருபர்கள் சிலர், அங்கு சென்று வீடியோ எடுத்துள்ளனர்.இதை பார்த்த கடை ஊழியர்கள், ஜெப்ரின் இமானுவேல், முத்துக்குமார், வேல்முருகன் ஆகியோர் நிருபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்பிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில், கர்நாடக போலீசார் திருட்டு நகை தொடர்பாக, மூன்று கடைகளில் சோதனை செய்து, 420 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.திருவாரூர் டவுன் போலீசில், நிருபர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், கடை ஊழியர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.