நகை கடையில் கைவரிசை: 6 பேர் கைது
பங்கார்பேட்டை : 'புர்கா' அணிந்து நகை வாங்க வந்தது போல் நடித்து, 30.50 லட்சம் ரூபாய் தங்க நகைகள் உட்பட 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொள்ளை கும்பல், ஆகஸ்ட் 14ல் சீனிவாசா ஜுவல்லரி கடையில் தங்க நகைகள் வாங்க வந்ததுபோல் வந்தனர். புர்கா அணிந்திருந்தனர். அப்போது கடையில், உரிமையாளர் சீனிவாச குப்தா மட்டுமே இருந்துள்ளார். பல வித நகைகளை காண்பிக்குமாறு கூறியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, 30.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும், 7 லட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபாயையும் எடுத்துக் கொண்டு வெளியேறினர். கும்பல் சென்ற பின் நகைகள், பணம் கொள்ளை போனது தெரியவந்தது. சீனிவாச குப்தா, பங்கார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, கோலாரில் வசித்து வந்த நாகீனா, 45, நவீனா, 33, முபீனா தாஜ், 25, நக்மா, 25, ஜெரீனா தாஜ், 36, ஆகிய பெண்களையும், நசீர் பாஷா, 38, என்ற ஆணையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 305 கிராம் தங்க நகைகள், 7 லட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபாய் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.