ஏட்டுவை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றவர் சுட்டுப்பிடிப்பு
ஹெப்பகோடி: ஏட்டுவை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றவரை, துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். தமிழகத்தின் தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் மாதேஷ், 40. பெங்களூரு, ஹெப்பகோடி காச்சநாயக்கனஹள்ளியில் வசித்தார். டீ கடை நடத்தினார். கடந்த 4 ம் தேதி மாதேஷின் வீட்டிற்குள் புகுந்த ஒருவர், மாதேஷ் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். ஹெப்பகோடி போலீசார் விசாரித்தனர். மாதேஷை கொலை செய்தது, பெங்களூரு ரூரல் ஜிகனியில் வசிக்கும், ஆந்திராவின் கோரண்டலா கிராமத்தின் ரவி பிரசாத் ரெட்டி, 40 என்பது தெரிந்தது. கடந்த 7ம் தேதி இவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 6ம் தேதி, பொம்மசந்திரா பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் பாலப்பா ரெட்டி, 61, என்பவரையும் கடத்தி சென்று கொலை செய்து, உடலை ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் போட்டது தெரிந்தது. இரு கொலை வழக்கு குறித்தும், ஹெப்பகோடி போலீசார் விசாரித்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, அரிவாளை பொம்மசந்திரா மயானம் அருகே புதைத்து வைத்திருப்பதாக, ரவி பிரசாத் ரெட்டி கூறினார். கத்தி, அரிவாளை பறிமுதல் செய்ய, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, பொம்மசந்திராவுக்கு, அவரை போலீசார் அழைத்து சென்றனர். பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து, கத்தியை எடுத்த ரவி பிரசாத் ரெட்டி, ஏட்டு அசோக்கை தாக்கிவிட்டு தப்பினார். அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் சோமசேகர், துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி, இரண்டு ரவுண்டு சுட்டு சரண் அடையும்படி எச்சரித்தார். அவர் கேட்கவில்லை. இதனால், அவரது இரண்டு கால்களிலும், சோமசேகர் துப்பாக்கியால் சுட்டார். சுருண்டு விழுந்த ரவி பிரசாத் ரெட்டியை கைது செய்த போலீசார், மருத்துவமனையில் அனுமதித்தனர். காயம் அடைந்த ஏட்டு அசோக்கும் சிகிச்சை பெறுகிறார். தற்காப்புக்காக ரவி பிரசாத் ரெட்டி சுட்டு பிடிக்கப்பட்டதாக, எலக்ட்ரானிக் சிட்டி டி.சி.பி., நாராயண் கூறி உள்ளார்.