ஆன்லைனில் போலி சட்ட சேவை பொது மக்களை ஏமாற்றியவர் கைது
பெங்களூரு, ஆன்லைனில் போலியான சட்டசேவை வழங்கி பொது மக்களை ஏமாற்றிய நபரை, சி.சி.பி., போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி: பெங்களூரின், ராமமூர்த்திநகரில் வசிக்கும் நபர் ஒருவருக்கு, மர்ம நபர்கள் சோலார் பேனல் பொருத்துவதாக நம்ப வைத்து, 1.5 கோடி ரூபாய் மோசடி செய்தனர். இந்த பணத்தை திரும்பப் பெற, ஆன்லைனில் சட்ட ஆலோசனை கூறுவோரை தேடினார். அப்போது அவருக்கு 'குவிக் மோடோ லீகல் சர்வீஸ்' என்ற இணையதளம் இருப்பது தெரிந்தது. அதை தொடர்பு கொண்டபோது, சட்டசேவை வழங்குவதாக, டெலிகாலர்கள் கூறினர். அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும் என்றனர். இதை நம்பிய நபர், 12.5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தார். பணம் கொடுத்து பல நாட்களாகியும், அந்த நிறுவனத்திடம் இருந்து பதில் வரவில்லை. இது பற்றி விசாரித்த போதுதான், அந்நிறுவனமும் போலியானது என்பது தெரிந்தது. இது தொடர்பாக, சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த, சிறப்பு குழு அமைக்கப்பட்டது. குழுவினரும் பல கோணங்களில் விசாரணை நடத்தியபோது, கஸ்துாரி நகரில் 'லீகல் சர்வீஸ்' என்ற பெயரில் செயல்பட்ட கால்சென்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு டெலிகாலர்களை நியமித்துக் கொண்டு, பொது மக்களை தொடர்பு கொண்டு, மோசடி செய்ததும் தெரிந்தது. கால்சென்டரில் முக்கிய குற்றவாளியை கைது செய்து விசாரித்தபோது, அவரது சகோதரர் துபாயில் இருந்து, மோசடி செய்வது தெரிந்தது. வழக்கு தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புள்ள மற்றவரை தேடி வருகிறோம். கால்சென்டரில் இருந்த 10 கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள், ஏழு போலியான நிறுவனங்களின் முத்திரைகள், காசோலைகள் உட்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.