மேலும் செய்திகள்
கன்னட ராஜ்யோத்சவா இன்று கொண்டாட்டம்
01-Nov-2025
மருதுபாண்டியர்களுக்கு மதுரை ஆதினம் புகழாரம்
28-Oct-2025
பெலகாவி: பெலகாவியில் தடையை மீறி மராத்தியர்கள் பேரணி சென்றனர். பெலகாவிக்குள் நுழைய முயன்ற, மஹாராஷ்டிரா எம்.பி., தைரியஷீல் மானே, எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார். கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லையில் பெலகாவி அமைந்துள்ளது. மராத்தி மொழி பேசுவோர் இங்கு அதிகம் வசிப்பதால், பெலகாவியை மஹாராஷ்டிரா சொந்தம் கொண்டாடுகிறது. விட்டுக் கொடுக்க கர்நாடகா மறுப்பதால், இரு மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. இது ஒரு புறம் இருக்க, பெலகாவியில் கன்னட ராஜ்யோத்சவா கொண்டாட, எம்.இ.எஸ்., எனும் மஹாராஷ்டிரா ஏகிகிரண் சமிதி எதிர்ப்பு தெரிவிக்கிறது. பெலகாவியில் உள்ள மராத்தியர்களை கறுப்பு தினம் கொண்டாடும்படி துாண்டி விடுகிறது. அனுமதி மறுப்பு ஆண்டுதோறும் ராஜ்யோத்சவா அன்று, பெலகாவியில் மராத்தியர்கள் கறுப்பு தினம் அனுசரித்தனர். கறுப்பு உடை அணிந்து ஊர்வலமாகவும் செல்கின்றனர். 2023ல் கன்னடர்கள், மராத்தியர்கள் இடையே ஏற்பட்ட தகராறால், மராத்தியர்கள் கருப்பு தினம் கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் ராஜ்யோத்சவா அன்று கறுப்பு தினம் அனுசரிக்க, மராத்தியர்கள் கேட்ட அனுமதியை, பெலகாவி மாவட்ட நிர்வாகம் மறுத்தது. ஆனாலும் நேற்று காலையில், பெலகாவி டவுன் சாம்பாஜி ராவ் மைதானத்தில், மராத்தியர்கள் குடும்பம், குடும்பமாக கூடினர். கறுப்பு உடை அணிந்திருந்தவர்கள், கருப்பு கொடி ஏந்தி, மைதானத்தில் இருந்து நகரின் முக்கிய பகுதிகளில் பேரணி சென்றனர். 'பெலகாவி எங்களுடையது' என்றும் கோஷம் எழுப்பினர். தடையை மீறி நடந்த பேரணிக்கு, போலீஸ் பாதுகாப்பு கொடுத்தது சர்ச்சையை கிளப்பியது. இதற்கிடையில் மஹாராஷ்டிராவில் இருந்து பெலகாவிக்கு, சிவசேனா எம்.பி., சாம்பாஜிராவ் தைரியஷீல் மானே தலைமையில், சிவசேனா தொண்டர்கள், எம்.இ.எஸ்., அமைப்பினர் வாகனங்களில் புறப்பட்டனர். பெலகாவி மாவட்டத்தின் நிப்பானி தாலுகா கோகனோலி கிராமத்தில் உள்ள, இரு மாநில எல்லைக்கு 1 கி.மீ., துாரத்திற்கு முன்பு வாகனங்களை நிறுத்தினர். அங்கிருந்து பேரணியாக பெலகாவி நோக்கி வந்தனர். அவர்களை எல்லையில், கர்நாடக போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். ெபலகாவி சாம்பாஜிராவ் மைதானத்தில் இருந்து மராத்தியர்கள் பேரணி புறப்படும் முன்பு, மாலமாருதி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிமிர்ச்சி அங்கு சென்றார். பெலகாவி எம்.இ.எஸ்., தலைவர் சுபம் ஷெல்கேயுடன், செல்போனில் 'செல்பி' எடுத்தார். இந்த படம் வைரலானது. கர்நாடகாவுக்கு துரோகம் செய்ததாக, காளிமிர்ச்சி மீது கன்னட அமைப்பினர் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். ''தவறு செய்திருந்தால் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பெலகாவி போலீஸ் கமிஷனர் புஷன் போசே தெரிவித்துள்ளார். 'சுபம் ஷெல்கேயுடன், நான் செல்பி எடுக்கவில்லை' என, இன்ஸ்பெக்டர் விளக்கம் அளித்துள்ளார். 'நேற்று முன்தினம் இரவு வரை சுபம் ஷெல்கே, மஹாராஷ்டிராவில் இருந்தார். நேற்று காலை பெலகாவி வந்தார். அவரை கண்காணிக்கும்படி அதிகாரிகள் கூறினர். அவரது வீடு மாலமாருதி போலீஸ் எல்லை பகுதியில் இருப்பதால், வீட்டிற்கு சென்றேன். அவர் இல்லை. மைதானத்தில்இருந்தார். அவர் இங்கு இருப்பதை உறுதி செய்ய புகைப்படம் எடுத்தேன். உயர் அதிகாரிக்கு அனுப்பி வைத்தேன்' என, காளிமிர்ச்சி கூறி உள்ளார்.
ராஜ்யோத்சவாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மராத்தியர்கள் பேரணி நடத்தியதால் கோபம் அடைந்த கன்னட அமைப்பினர், பெலகாவி கோகேட் சதுக்கத்தில் உள்ள மாரத்தா மங்களா அலுவலகத்திற்கு சென்றனர். அலுவலகம் முன் போராட்டம் நடத்தியதுடன் உள்ளே நுழைய முயன்றனர். 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
01-Nov-2025
28-Oct-2025