ஏரிகளில் கழிவுநீர் தடுக்க நடவடிக்கை
பெங்களூரு : ''ஏரிகளில் கழிவுநீர் கலக்கப்படுவதை பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரிகள் தடுக்க வேண்டும்,'' என பெங்களூரு மாநகராட்சியின் தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். ஹெப்பால் சந்திப்பு, நாகவரா சந்திப்பு, மாரத்தஹள்ளி போலீஸ் நிலையம், கார்த்திக் நகர், கஸ்துாரி நகர் மேம்பாலம், அரண்மனை குட்டஹள்ளி, பனத்துார் ரயில்வே சப்வே, ஆர்.ஆர்., நகர் ஆர்ச் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் உள்ள வடிகால்கள் சீரமைக்கப்பட வேண்டும். மெட்ரோ பணிகள் நடக்கும் இடங்களில் சிக்கல்கள் இருந்தால், மெட்ரோ அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கவும். சாலைகளில் உள்ள பள்ளங்களை மூட வேண்டும். ஏரிகளில் கழிவுநீர் கலக்கப்படுவதை பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரிகள் தடுக்க வேண்டும். கழிவுநீரை, மழை நீர் கால்வாய்களில் சட்ட விரோதமாக கலப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டும் பணியை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.