மெட்ரோ ரயில் சேவை அத்திப்பள்ளிக்கு நீட்டிப்பு
பெங்களூரு: கர்நாடகா - தமிழக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளி வரை பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. பெங்களூரில் ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரையிலான மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது. இந்த ரயில், ஓசூரிலிருந்து தினமும் பெங்களூருக்கு பணி நிமித்தமாக வருவோருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஓசூரிலிருந்து வரும் பயணியர், பொம்மசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் பயணிப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பி, பெங்களூரின் பல பகுதிகளை அடைந்து வருகின்றனர். இருப்பினும், அவர்கள், தமிழக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியிலிருந்து பொம்மசந்திரா வரை போக்குவரத்து நெரிசலில் பயணிக்கின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய திட்டத்தை பெங்களூரு மெட்ரோ நிறுவனம் கொண்டு வந்து உள்ளது. அதாவது, மஞ்சள் பாதையின் கடைசி நிறுத்தமான பொம்மசந்திராவிலிருந்து அத்திப்பள்ளி வரையில் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க திட்டமிட்டு உள்ளனர். 10.50 கி.மீ., துாரத்துக்கு ரயில் சேவையை நீட்டிக்கவும், புதிதாக ஒன்பது மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கவும், விரைவில் டெண்டர் கோரப்படவும் உள்ளது. நாராயணா இதய மருத்துவமனை, சந்தாபுரா சதுக்கம், ஓல்டு சந்தாபுரா, திருமகொண்டனஹள்ளி, பாலகரனஹள்ளி, அத்திபள்ளி தொழிற்பேட்டை, யாதவனஹள்ளி, அத்திபள்ளி, அத்திபள்ளி முனையம் என ஒன்பது ரயில் நிலையங்கள் அமைய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே ஓசூரிலிருந்து பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் சேவை துவங்குவது குறித்து ஆலோசிப்பதாக தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் கூறியிருந்த நிலையில், அத்திப்பள்ளி வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது தமிழகத்திலிருந்து பணிக்கு வருவோர் பெரிதும் பயனடைவர்.