ஆர்.எஸ்.எஸ்.,சை தடை செய்யுமாறு கூறவில்லை அமைச்சர் பிரியங்க் கார்கே திட்டவட்ட மறுப்பு
பெங்களூரு: ''ஆர்.எஸ்.எஸ்.,சை தடை செய்ய வேண்டுமென கூறவில்லை. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, கல்லுாரிகளில் அவர்களின் நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று தான் கூறினேன்,'' என, அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். 'கர்நாடகாவில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்க வேண்டும்' என முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக கிராம மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியிருந்தார். இதற்கு பா.ஜ., உட்பட ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெங்களூரில் நேற்று பிரியங்க் கார்கே அளித்த பேட்டி: ஹிந்துவான நான், ஹிந்து மதத்துக்கு எதிரானவன் அல்ல. ஆர்.எஸ்.எஸ்.,க்கு தான் எதிரானவன். கடலோரம், மலைப் பகுதி மாவட்டங்களில் யார் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் தகவல்களை பெறுங்கள். மறுப்பு தடியுடன் சுற்றும் ஆர்.எஸ்.எஸ்., போன்று ஒரு தலித் அல்லது பிற்படுத்தப்பட்ட அமைப்பினர் செய்தால் சரியா? பள்ளிகளில் மாணவர்களுக்கு மூளைச்சலவை செய்வதை ஆர்.எஸ்.எஸ்., நிறுத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸின் கைப்பாவை தான் பா.ஜ., அவர்கள் இல்லாவிட்டால் பா.ஜ., பூஜ்யம் தான்; மதம் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் பூஜ்யம் தான். சர்தார் வல்லபபாய் பட்டேல் ஆர்.எஸ்.எஸ்.,சை தடை செய்தார். அவரின் காலில் விழுந்த சங்கத்தினர், மத்திய அரசின் விதிகளை பின்பற்றுகிறோம் என்று கூறி மன்னிப்புக் கேட்டனர். இதையடுத்து அமைப்பு மீதான தடை நீக்கப்பட்டது. இதனால் தான் பட்டேலுக்கு பா.ஜ.,வினர் சிலை வைத்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினர்கள் கோழைகள். அவர்களின் வரலாற்றை பாருங்கள். ஆங்கிலேயர்களிடம் இருந்து ஓய்வூதியம் வாங்கிய சாவர்க்கர் ஒரு தேசபக்தரா? அவர், தன் அலுவலகத்தில் தேசிய கொடியை கூட வைக்கவில்லை. அப்படிப்பட்டவர் எப்படி தேசபக்தராக இருக்க முடியும்? உள்துறை அமைச்சருக்கு இருப்பது போன்று, மோகன் பகவத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது ஏன்? எச்சரிக்கை பிரஹலாத் ஜோஷி, அசோக் பிள்ளைகள், ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணியட்டும். டில்லி அமைச்சர்களின் பிள்ளைகள் என்ன செய்கின்றனர்? நேற்று முன்தினம் ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிந்த எம்.எல்.ஏ., முனிரத்னா, காந்தியின் படத்தை வைத்திருந்தார். காந்தியை கொன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ்., என்ற வரலாறு அவருக்கு தெரியாது. நம்மை பிரிக்க முயற்சிக்கும் அவர்கள், பொய்களை உருவாக்குவதில் முனைவர் பட்டம் பெற்றவர்கள்.மல்லிகார்ஜுன கார்கே உள்துறை அமைச்சராக இருந்தபோது, ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்துக்கு சென்ற புகைப்படத்தை காட்டுகின்றனர். உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவர், அங்கு சென்று, 'சிவாஜி நகர் ஒரு பதற்றமான பகுதி. இங்கே உங்கள் வாலை அவிழ்த்துவிட்டால், கவனமாக இருங்கள்' என்று அவர்களை எச்சரித்திருந்தார். இவ்வாறு அவர்கூறினார்.