உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 7 ஆண்டாகியும் எந்த வளர்ச்சியும் இல்லை முதல்வரிடம் எம்.எல்.ஏ., ரூபகலா ஆதங்கம்

7 ஆண்டாகியும் எந்த வளர்ச்சியும் இல்லை முதல்வரிடம் எம்.எல்.ஏ., ரூபகலா ஆதங்கம்

தங்கவயல்: 'தங்கவயலை தாலுகாவாக்கி ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்றும் எதுவும் செய்யவில்லை' என, முதல்வர் சித்தராமையாவின் ஆட்சியை அவரது கட்சியைச் சேர்ந்த தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ., ரூபகலா குறை கூறியுள்ளார். கோலார் மாவட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கான கோரிக்கைகளை தெரிவிக்குமாறு முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். இதை தொடர்ந்து, அவரிடம் தன் தொகுதி மேம்பாட்டுக்குத் தேவையானவை குறித்து, பெங்களூரில் நேற்று முன்தினம் தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா அளித்த மனு: தங்கவயலை தனித் தாலுகாவாக மாற்றி, 7 ஆண்டுகள் ஆகின்றன. ஆயினும் சமூக நலம், விவசாயம், தோட்டக்கலை, தாலுகா மருத்துவ அதிகாரி அலுவலகம் உட்பட சில துறைகள் இன்னும் வரவில்லை. தங்கவயல் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 800 முதல் 1,000 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள். இதய நோய் ஏற்பட்டால் அவசர சிகிச்சைக்கு வழி இல்லை. இதனால் 30 கி.மீ., அல்லது 100 கி.மீ., தூரம் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. இதில் அரசு கவனம் செலுத்தவில்லை. கர்நாடக தொழில் மேம்பாட்டுத் துறையிடம் 2023 - -24ல் 668.20 ஏக்கர் நிலத்தை கர்நாடக அரசு ஒப்படைத்தது. இண்டஸ்ட்ரியல் டவுன்ஷிப் ஏற்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான பெயர் பலகை வைத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் எந்த ஒரு பணியும் நடக்கவில்லை. வேலைக்காக தங்கவயலில் இருந்து, தினமும், 25 ஆயிரம் பேர் பெங்களூரு சென்று வருகின்றனர். இங்கு வேலை வாய்ப்புக்கு தொழிற்சாலைகள் உருவாகவில்லை. இதற்கு ஆவன செய்ய வேண்டும். தங்கவயலில் ஏ.பி.எம்.சி., மார்க்கெட் அமைக்க 25 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதை சமப்படுத்தும் வேலை தான் நடந்துள்ளது. முழு அளவில் உருவாக்க அரசு, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் உட்பட கோலார் மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ