மொபைல் போன் திருடன் என்பதால் மகன் உடலை வாங்க மறுத்த தாய்
பெங்களூரு: திருட்டு வழக்கில் தொடர்பு உள்ளதால், மகனின் உடலை வாங்க மறுத்த தாய், கேரளாவுக்கு திரும்பிச் சென்றார்.பெங்களூரின் கனகபுரா சாலையில் உள்ள பேஷன் பேக்டரி பேஸமென்டில், சில நாட்களுக்கு முன்பு அழுகிய ஆணின் உடல் கிடந்தது. இதை கண்ட அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த கோனனகுன்டே போலீசார், உடலை மீட்டு அந்நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.இறந்து கிடந்தவர் கையில் இருந்த டாட்டுவை வைத்து விசாரித்தபோது, அவர் கேரளாவை சேர்ந்த விஷ்ணு பிரசாந்த், 30, என்பது தெரிய வந்தது.அவரது உடலின் அருகில் ஒரு மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மொபைல் போனை பற்றி விசாரித்தபோது, கேரளாவை சேர்ந்த நபருடையது என்பது தெரிந்தது.அவரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, தன் மொபைல் போன் திருடுபோனதாக கூறினார். விஷ்ணு பிரசாந்த் கேரளாவைச் சேர்ந்த திருடன் என்பது தெரிந்தது.இறந்தது அவர் தானா என்பதை உறுதிப்படுத்த, அவரது தாயை பெங்களூருக்கு வரவழைத்தனர். தாயும் இறந்த நபர் தன் மகன் விஷ்ணு பிரசாந்த் தான் என்பதை உறுதிப்படுத்தினார்.ஆனால் மகன் திருடன் என்பதை அறிந்து, மனம் வருந்தினார். மகன் உடலை பெற்றுக் கொள்ள மறுத்த அவர், கேரளாவுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.வேறு வழியின்றி, போலீசாரே இறுதிச் சடங்கு செய்து விஷ்ணு பிரசாந்தின் உடலை அடக்கம் செய்தனர்.