மைசூரு சாண்டல் சோப் தொழிற்சாலை; விஜயபுராவில் 50 ஏக்கரில் அமைக்க முடிவு
பெங்களூரு: விஜயபுரா மாவட்டத்தில், 50 ஏக்கரில் மற்றொரு மைசூரு சந்தன சோப் தொழிற் சாலை திறக்க, அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து, கே.எஸ்.டி.எல்., எனும் கர்நாடக சோப் அண்ட் டிடர்ஜென்ட் தலைவர் அப்பாஜி நாடகவுடா கூறியதாவது: விஜயபுரா மாவட்டத்தின் இட்டங்கிஹாள் கிராமத்தில், மற்றொரு மைசூரு சந்தன சோப் தொழிற்சாலை அமைக்க, திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசு ஏற்கனவே 50 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது. இயந் திரங்கள் வாங்க, கட்டட வரைபடம் குறித்து திட்ட அறிக்கை தயாராக உள்ளது. இங்கு, 100 கோடி ரூபாய் செலவில் தொழிற்சாலை அமையும். மைசூரு சந்தன சோப் விற்பனையில், 81 சதவீத வர்த்தகம் மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானாவில் நடக்கிறது. இதற்கான போக்குவரத்துக்கு ஏழு முதல் எட்டு கோடி ரூபாய் செலவாகிறது. விஜய புராவில் தொழிற்சாலை திறந்தால், போக்குவரத்து செலவு குறையும். மைசூரு, ஷிவமொக்கா, பெங்களூரில் தொழிற்சாலை கிளைகள் உள்ளன. இப்போது விஜயபுராவில் அமைக்கப்படுகிறது. சமீபத்தில் நான் ஆஸ்திரேலியா சென்றிருந்தேன். அங்கு கர்நாடகாவில் இருந்து வாங்கி சென்ற சந்தன செடிகளை வளர்த்து, மிகவும் தரமான சந்தன எண்ணெய் தயாரிக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் இருந்து, உயர்தரமான பாடி லோஷன், ஹேண்ட் வாஷ், முகத்துக்கு தடவும் கிரீம் உட்பட அழகு சாதனங்களை வாங்கி வந்து, கர்நாடகாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளோம். வாடிக்கையாளர்களை ஈர்த்தால், இத்தகைய பொருட்களை நம் மாநிலத்திலேயே தயாரித்து, கே.எஸ்.டி.எல்., பிராண்டில் விற்கலாம். மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. கே.எஸ்.டி.எல்., வர்த்தகம், ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. 2024 - 25ம் ஆண்டில், 2,000 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளது. சந்தன சோப் உட்பட கே.எஸ்.டி.எல்.,லின் உற்பத்தி பொருட்களை, சர்வதேச அளவில் கொண்டு செல்லும் நோக்கில், நடிகை தமன்னாவை துாதராக நியமித் துள்ளோம். இரண்டு ஆண்டுகளுக்கு 6.2 கோடி ரூபாய் ஊதியம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஷூட்டிங் முடிந்துள்ளது. முக்கியமான மொழிகளில் விரைவி ல் விளம்பரம் வெளியாகும். கன்னடத்தில் நடிகை மாலாஸ்ரீயின் மகள் ஆராதனா, நடிகைகள் சான்யா அய்யர், ஐஷானி ஷெட்டியும் பிரசாரம் செய்கின்றனர் . இவ்வாறு அவர் கூறி னார்.