உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நந்தினி நெய் விலை ரூ.90 அதிகரிப்பு பால் விலையும் உயரும் என்கிறார் சுரேஷ்

நந்தினி நெய் விலை ரூ.90 அதிகரிப்பு பால் விலையும் உயரும் என்கிறார் சுரேஷ்

பெங்களூரு: கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, நந்தினி நெய் விலையை 90 ரூபாய் உயர்த்தியுள்ளது. புதிய விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு நந்தினி நெய்யின் விலை, கிலோவுக்கு 610 ரூபாயாக இருந்தது. இதன் விலையை 90 ரூபாய் உயர்த்தி, கே.எம்.எப்., உத்தரவிட்டுள்ளதால், கிலோ நெய்யின் விலை தற்போது 700 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று முதல் புதிய விலை, அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், மக்கள் தத்தளிக்கின்றனர். இதற்கிடையே நெய்யின் விலையை அதிகரித்துள்ளதால், மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இன்னும் சில நாட்களில், பால் விலையும் உயர்த்தப்படவுள்ளது. இதுகுறித்து, பெங்களூரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் அளித்த பேட்டி: இப்போது நெய் விலை, கிலோவுக்கு 90 ரூபாய் அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களின் பிராண்டுகளுடன் ஒப்பிட்டால், நம் மாநிலத்தில் நெய்யின் விலை குறைவாக உள்ளது. நெய் தவிர நந்தினியின் மற்ற உற்பத்திகளின் விலையில், எந்த மாற்றமும் இல்லை. நாடு முழுதும் வெண்ணெய் பற்றாக்குறை உள்ளது. நெய் மற்றும் வெண்ணெய் தேவை அதிகரித்துள்ளது. இதுவே விலை உயர்வுக்கு காரணம். தரத்திலும் நந்தினி உற்பத்திகள் முன்னணியில் உள்ளன. 100 சதவீதம் சுத்தமான நெய்யை, நாம் தயாரிக்கிறோம். வேறு மாநிலத்தவர், நம்மை விட அதிகமான விலைக்கு விற்கின்றனர். கிலோவுக்கு 1,000 முதல், 1,200 ரூபாய் வரை நெய் விலை உள்ளது. நமக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட, விலையை உயர்த்த வேண்டும் என, கே.எம்.எப்.,பிடம் வேண்டுகோள் விடுத்தோம். இதை ஏற்று, 90 ரூபாய் உயர்த்தியது. வரும் நாட்களில் பால் விலையும் அதிகரிக்கலாம். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், கர்நாடகாவில் மட்டுமே, பால் விலை குறைவாக உள்ளது. எனவே பால் விலையை உயர்த்தும்படி, கே.எம்.எப்.,பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். எவ்வளவு விலை உயர்த்த வேண்டும் என, குறிப்பிடவில்லை. இது குறித்து, அரசு முடிவு செய்யும். கர்நாடகாவில் தற்போது 95 லட்சம் லிட்டர் முதல், 1 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை