தியாகிகளுக்கு பென்ஷன் வழங்குவதில் அலட்சியம்: உபலோக் ஆயுக்தா வழக்கு
பெங்களூரு: சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு, மாத பென்ஷன் வழங்காதது குறித்து, ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில் உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா வழக்குப் பதிவு செய்துள்ளார். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினருக்கு, மாதந்தோறும் பென்ஷன் வழங்குவது, அரசின் பொறுப்பாகும். ஆனால் கர்நாடக அரசு, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு, மாத பென்ஷன் வழங்குவதில்லை என்பது குறித்து, ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அவற்றின் அடிப்படையில், உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா, தாமாக முன் வந்து நேற்று முன் தினம் வழக்குப் பதிவு செய்துள்ளார். பாகல்கோட், பெங்களூ ரு ரூரல், பெலகாவி, பல்லாரி, விஜயநகரா, பீதர், தட்சிண கன்னடா, தாவணகெரே, ஹாவேரி, கலபுரகி, கோலார், கொப்பால், மாண்டியா உட்பட, 16 மாவட்டங்களின் வருவாய்த்துறையின் உதவி கமிஷனர்கள் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தியாகிகளின் பென்ஷன் விஷயத்தில், தற்போதைய நிலவரம் குறித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், வருவாய்த்துறையின் கூடுதம் தலைமை செயலர்களிடம், நவம்பர் 26க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, உதவி கமிஷனர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உத்தரவில் நீதிபதி கூறியதாவது: மாநிலம் முழுவதும் 150 சுதந்திரப் போராட்ட தியாகிகள் உள்ளனர். இவர்களில் மூவர் பெண்களாவர். 1980 சட்டப்படி, தியாகிகளுக்கு மாதந்தோறும் தலா 10,000 ரூபாய் கவுரவ நிதியும், காலமான தியாகிகளின் மனைவிகளுக்கு தலா 4,000 ரூபாய் பென்ஷன் வழங்க வேண்டும். ஆனால் பல மாவட்டங்களில், சில மாதங்களாக பென்ஷன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது என் கவனத்துக்கு வந்துள்ளது. நாட்டுக்காக போராடிய தியாகிகளுக்கு, செய்யும் அவமதிப்பாகும். இது கர்நாடக லோக் ஆயுக்தா சட்டப்படி, மோசமான நிர்வாகத்துக்கு சமமாகும். தியாகிகளின் பென்ஷன் விஷயத்தில், நிர்ணயித்த நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.