உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முதல்வர் பேச்சை அமைச்சர்கள் மதிப்பது இல்லை சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் அசோக் கிளாஸ்

முதல்வர் பேச்சை அமைச்சர்கள் மதிப்பது இல்லை சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் அசோக் கிளாஸ்

பெங்களூரு:'முதல்வர் சித்தராமையா, தன் கோபத்தை அதிகாரிகள் மீது காட்டக்கூடாது. பதிலாக அமைச்சர்களுக்கு 'கிளாஸ்' எடுத்து, தன் தைரியத்தை நிரூபிக்க வேண்டும்' என எதிர்க்கட்சித் தலைவர் அசோக் சவால் விடுத்தார்.இதுதொடர்பாக, 'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று அவர் கூறியதாவது:'அவுட் கோயிங்' முதல்வர் சித்தராமையா, மாவட்ட கலெக்டர்கள், சி.இ.ஓ.,க்கள் ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா, அதிகாரிகளுக்கு கிளாஸ் எடுத்துள்ளார். தன் உத்தரவுகளை பின்பற்றும்படி அறிவுறுத்தியதாக, ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.காங்கிரஸ் அரசில் ஆட்சி இயந்திரம், திசை மாறியுள்ளது என்பதற்கு, இதுவே சாட்சியாகும்.முதல்வர் சித்தராமையா, தன் கோபத்தையும், ஆவேசத்தையும் அதிகாரிகளிடம் காட்டக் கூடாது. அமைச்சர்கள் மீது காட்டட்டும். அதை விட்டு விட்டு, தன் விரக்தி மற்றும் இயலாமையால் ஏற்படும் கோபத்தை, அதிகாரிகளிடம் காட்டுவது சரியல்ல.

'ஜனதா தரிசனம்'

தன் பேச்சுக்கும், உத்தரவுகளுக்கும் நயா பைசா மதிப்பு அளிக்காத அமைச்சர்களுக்கு கிளாஸ் எடுத்து, முதல்வர் தன் தைரியத்தை காட்ட வேண்டும். முதல்வர், அமைச்சர்களுக்கு பிறப்பிக்கும் உத்தரவுகளில், ஒன்றாவது பின்பற்றப்படுகிறதா?மாதம் ஒரு முறையாவது, 'ஜனதா தரிசனம்' நடத்தி, மக்களின் பிரச்னைகளை கேட்டறியுங்கள், மாவட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள் என, முதல்வர் உத்தரவிட்டிருந்தார்; அமைச்சர்கள் பொருட்படுத்தவில்லை.குறைந்தபட்சம் வாரத்தில் மூன்று நாட்கள், அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றுங்கள் என, உத்தரவிட்டிருந்ததையும், அமைச்சர்கள் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அமைச்சரவை கூட்டம் நடக்கும்போது மட்டும், விதான்சவுதாவுக்கு வருகின்றனர். மற்ற நாட்களில் பெரும்பாலான அமைச்சர்கள், அங்கே எட்டி கூட பார்ப்பது இல்லை.

நிவாரணம்

ஓய்வு பெற்ற அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளனர். உடனடியாக, அவர்களை பணியில் இருந்து விடுவிக்கும்படி கூறியும் விடுவிக்கவில்லை. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு, நிவாரணம் தாருங்கள் என, முதல்வர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் பல மாவட்டங்களில் இன்னும் நிவாரணம் வழங்கவில்லை.முதல்வராக பதவியேற்ற ஆரம்பத்தில், ஏரிகளின் ஆக்கிரமிப்பை அகற்றும்படி கூறியிருந்தார். யாரும் ஆர்வம் காட்டவில்லை. மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் தொந்தரவு குறித்து, ஆய்வு செய்யும்படி முதல்வர் உத்தரவிட்டார். இதையும் அமைச்சர்கள் மதிக்கவில்லை.முதல்வரின் கவனத்துக்கு வந்ததோ, இல்லையோ தெரியவில்லை. நேற்று முன் தினம் குடகில் ஒரு தற்கொலை நடந்துள்ளது.நீர்ப்பாசனத்துறை பொறியாளர்களை இடமாற்றம் செய்து, முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துணை முதல்வர் சிவகுமார், அரசு தலைமை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். தன் அனுமதியில்லாமல், அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது என, உத்தரவிட்டுள்ளார். இப்படியே கூறிகொண்டே சென்றால், பட்டியல் நீளும்.

குடும்ப தலைவன்

வீட்டின் குடும்ப தலைவன் சரியாக இல்லையென்றால், அந்த குடும்பம் வீதிக்கு வரும். அதே போன்று அரசில் முதல்வருக்கு பிடிமானம் இல்லையென்றால், ஆட்சி இயந்திரம் தள்ளாடும். முதல்வரின் பேச்சுக்கு, அமைச்சர்களே மதிப்பளிப்பது இல்லை. இதனால் அரசில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே முதலில் தமது உத்தரவுகளுக்கு கீழ்படியும்படி, அமைச்சர்களுக்கு முதல்வர் கிளாஸ் எடுக்கட்டும்.பணியாற்றாத சோம்பேறி அமைச்சர்களை, அமைச்சரவையில் இருந்து நீக்கி விட்டு, திறமையானவர்களை சேர்த்து கொள்ளுங்கள். அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற, முதல்வரின் விருப்பத்துக்கு, காங்கிரஸ் மேலிடம் செவி சாய்க்கவில்லையே ஏன். இது முதல்வர் மாற்றப்படலாம் என்பதற்கான அறிகுறியா?இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி