குழந்தைகள் தினத்தன்று பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு
பெங்களூரு: ''அரசு பள்ளிகளில் வரும் 14ம் தேதி பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு நடத்தப்படும்,'' என, மாநில துவக்கக் கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 14ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் மாநிலத்தில் உள்ள உயர்நிலை, துவக்க நிலை அரசு பள்ளிகளின் வரலாற்றில் முதன்முறையாக பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு நடத்தப்படுகிறது. முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார். இந்த சந்திப்பின் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தங்கள் குழந்தைகள் எப்படி கல்வி கற்கின்றனர் என்பதை பெற்றோர் நேரடியாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பள்ளிகளின் அடிப்படை வசதிகள் செய்து தருவது எளிதாக இருக்கும். கர்நாடகாவில், அரசு பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளன. அரசு பள்ளிகளில் எப்போது அட்மிஷன் துவங்கும் என பெற்றோர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அரசு பள்ளிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.