உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முகாம்களுக்கு புறப்பட்ட தசரா யானைகள் நெகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்த மக்கள்

முகாம்களுக்கு புறப்பட்ட தசரா யானைகள் நெகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்த மக்கள்

மைசூரு : மைசூரு தசராவில் பங்கேற்ற 14 யானைகளும், பாரம்பரிய முறைப்படி நேற்று வழியனுப்பி வைக்கப்பட்டன. மைசூரு தசராவுக்காக, மாநிலத்தின் பல்வேறு முகாம்களில் இருந்து மைசூருக்கு ஆகஸ்ட் மாதம், முதல் கட்டமாக அபிமன்யு தலைமையில் ஒன்பது யானைகளும், இரண்டாம் கட்டமாக ஐந்து யானைகளும் வந்தன. அரண்மனை வளாகத்தில் தங்கியிருந்த யானைகளுக்கு, தினமும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டன. காலை, மாலை நேரங்களில் அரண்மனையில் இருந்து பன்னிமண்டபம் வரை நடைபயிற்சி அளிக்கப்பட்டன. அது தவிர, பீரங்கு குண்டு வெடிப்பு, யானைகளின் எடை ஆய்வு, 200 கிலோ மணல் மூட்டைகள், 200 கிலோ மரத்தில் செய்யப்பட்ட மர அம்பாரி மூலம் நடைபயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. யானைகளின் ஊர்வலத்தை பார்க்கவே, தினமும் காலை, மாலை வேளையில் குழந்தைகளுடன் பெற்றோர் சாலை ஓரங்கில் நின்று கொண்டிருப்பர். யானைகள் ஊர்வலமாக வருவதை பார்த்த அரண்மனை நகர மக்கள், தங்கள் மொபைல் போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர். குழந்தைகள் யானைகளை பார்த்து குஷியடைந்தனர். விஜயதசமி அன்று நடந்த ஜம்பு சவாரியில் யானைகள் பங்கேற்ற பின், இரண்டு நாட்கள் அரண்மனையில் ஓய்வெடுத்தன. இந்நிலையில், யானைகளை அதன் முகாம்களுக்கு வைக்கும் வழியனுப்பும் நிகழ்ச்சி நேற்று அரண்மனை வளாகத்தில் நடந்தது. வனத்துறை, அரண்மனை வாரியம் சார்பில் யானைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பொது மக்களும் பங்கேற்றனர். வனத்துறை அதிகாரி பிரபு கவுடா கூறுகையில், ''இம்முறை தசரா பிரமாண்டமாக நடந்து. 14 யானைகள் முகாம்களுக்கு செல்கின்றன. இன்று (நேற்று) மாலைக்குள் சென்றடைவிடும். யானைகள் அனைத்தும் ஆரோக்கியமாக உள்ளன,'' என்றார். தசரா யானைகளுக்கு பல ஆண்டுகளாக பூஜை செய்து வரும் அர்ச்சகர் பிரஹலாத் ராவ் கூறுகையில், ''அபிமன்யு தலைமையிலான ஜம்பு சவாரி வெற்றிகரமாக நடந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக, இந்த யானைகள் மைசூரு நகரில் உள்ள மக்களுக்கு தினமும் தரிசனம் அளித்து வந்துள்ளன,'' என்றார். யானைகளை அழைத்து செல்ல, 14 லாரிகள் வந்திருந்தன. யானைகள் லாரியில் ஏறி, புறப்பட்டபோது, அங்கிருந்து பொது மக்கள் உணர்ச்சிவசப்பட்டனர். குழந்தைகள் சிலர் போகாதே என்று கண்ணீர் சிந்தியது நெகிழ்ச்சி அடைய வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ