தனியாக இருந்த பெண் கொலை; மர்ம கும்பலுக்கு போலீசார் வலை
காட்டன்பேட் : தனியாக இருந்த பெண்ணை கொலை செய்த மர்ம கும்பல், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து, தலைமறைவானது.பெங்களூரு, காட்டன்பேட்டின், தர்கா சாலையில் வசிப்பவர் பிரகாஷ், 45. இவர் ஹோல்சேல் துணி வியாபாரம் செய்கிறார். இவரது மனைவி லதா, 40. தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.மகள் படிப்பை முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றுகிறார். மகன் பள்ளியில் படிக்கிறார்.பிரகாஷ் நேற்று காலை வழக்கம் போன்று, கடைக்கு சென்றிருந்தார். மகன் பள்ளிக்கும், மகள் பணிக்கும் சென்றதால் லதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.இவர் தனியாக இருப்பதை நோட்டம் விட்ட மர்ம கும்பல், வீட்டுக்குள் புகுந்து, அவர் வாயை பொத்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, பீரோவில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பியோடியது.தங்கள் மகளின் திருமணத்துக்காக, தம்பதி சிறுக, சிறுக தங்க நகைகள் சேர்த்து வைத்திருந்தனர். அந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.பிரகாஷ் மதிய உணவுக்காக, வீட்டுக்கு வந்தபோது, மனைவி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு, அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த காட்டன்பேட் போலீசார், லதாவின் உடலை மீட்டனர். வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.சம்பவ இடத்தின் சுற்றுப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கொலையாளிகளை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.