உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சந்தன மர கடத்தல் குறித்து புகார் வழக்கு பதிய போலீசாருக்கு உத்தரவு

சந்தன மர கடத்தல் குறித்து புகார் வழக்கு பதிய போலீசாருக்கு உத்தரவு

பெங்களூரு: 'சந்தன மரம் கடத்தல் குறித்து விவசாயிகள் புகார் அளித்தால் உடனே வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்' என, அனைத்து போலீஸ் நிலைய போலீசாருக்கும், டி.ஜி.பி., சலீம் அறிவுறுத்தி உள்ளார். கர்நாடகாவில் தனியார் நிலம், வனப்பகுதிகளில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை, மர்ம நபர்கள் சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தி விற்பனை செய்வது அடிக்கடி நடந்து வருகிறது. சந்தன மரம் வளர்க்கும் விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் சந்தன மரங்கள் கடத்தப்படும்போது, போலீஸ் நிலையங்களுக்கு சென்று புகார் அளிக்கின்றனர். 'இந்த புகாரை நாங்கள் விசாரிக்க முடியாது. வனத்துறை தான் விசாரிக்க வேண்டும்' என்று விவசாயிகளை போலீசார் திரும்பி அனுப்புகின்றனர். வனத்துறையிடம் புகார் செய்தால், 'போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும்' என்று கூறுகின்றனர். இதனால் எங்கு புகார் அளிப்பது என்று தெரியாமல், விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதுகுறித்து விவசாய அமைப்புகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றன. இந்த பிரச்னை குறித்து நேற்று முன்தினம் உள்துறை கூடுதல் தலைமை செயலர், வனத்துறை அதிகாரிகள், டி.ஜி.பி., ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையை தொடர்ந்து டி.ஜி.பி., சலீம் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில், 'சந்தன மரம் கடத்தல் குறித்து விவசாயிகளிடம் இருந்து புகார் வந்தால், அந்த புகாரை ஏற்றுக் கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்யலாம். 'கர்நாடக வன சட்டம் பிரிவு 87ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம். சந்தன மரத்தை கடத்தும் கும்பலை பற்றி தகவல் சேகரித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம்.விவசாயிகளிடம் இருந்து வரும் புகார்களை கட்டாயம் ஏற்றுக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்' என, கூறப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை