உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 950 கிராம் தங்க கட்டி ஆட்டை போலீஸ் எஸ்.ஐ., சஸ்பெண்ட்

950 கிராம் தங்க கட்டி ஆட்டை போலீஸ் எஸ்.ஐ., சஸ்பெண்ட்

ஹலசூரு கேட்: நகை கடை உரிமையாளரிடம் இருந்து 950 கிராம் எடையுள்ள, தங்க கட்டிகளை, 'ஆட்டை'யை போட்ட, எஸ்.ஐ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.பெங்களூரு, காட்டன்பேட் போலீஸ் நிலைய எஸ்.ஐ., சந்தோஷ். இவர், 2020ல் ஹலசூரு கேட் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றினார். அப்போது, நகை கடை ஒன்றில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டு, உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தன.இந்நிலையில், நகை கடை உரிமையாளரிடம் மொபைல் போனில் பேசிய சந்தோஷ், பறிமுதல் செய்யப்பட்ட நகைகளில் 950 கிராம் எடையுள்ள தங்க கட்டியை புகைப்படம் எடுக்காமல் விட்டுவிட்டோம். போலீஸ் நிலையத்திற்கு வந்து, அந்த தங்க கட்டியை கொடுத்து செல்லுங்கள். சில நாட்களில் திருப்பி தருகிறேன் என்று கூறினார். இதை நம்பிய நகைக்கடை உரிமையாளரும் தங்க கட்டியை கொடுத்து சென்றார்.ஆனால் பல மாதங்கள் ஆகியும், தங்க கட்டியை சந்தோஷ் திரும்ப கொடுக்கவில்லை. இதுபற்றி நகை கடை உரிமையாளர் கேட்ட போது, தங்க கட்டியை நானே வைத்து கொள்கிறேன் என்று சந்தோஷ் கூறினார். தங்க கட்டிக்கு உரிய பணத்திற்காக காசோலை கொடுத்து உள்ளார். ஆனால் பணம் இல்லை என்று காசோலை திரும்ப வந்து விட்டது. இதற்கிடையில் ஹலசூரு கேட் போலீஸ் நிலையத்தில் இருந்து, காட்டன்பேட் போலீஸ் நிலையத்திற்கு சந்தோஷ் இடமாற்றம் செய்யப்பட்டார்.நகைக்கடை உரிமையாளர் அடிக்கடி சந்தோஷை சந்தித்து, தங்க கட்டியை திரும்ப தரும்படி கேட்டு உள்ளார். இதனால் கோபம் அடைந்த சந்தோஷ், கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மேற்கு மண்டல டி.சி.பி., கிரிஷ் கவனத்திற்கு, நகைக்கடை உரிமையாளர் கொண்டு சென்றார். எஸ்.ஐ., மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு, டி.சி.பி., உத்தரவிட்டு இருந்தார். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், எஸ்.ஐ., சந்தோஷ் தங்க கட்டியை ஆட்டையை போட்டது தெரிந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்ய, ஹலசூரு கேட் போலீசாருக்கு, டி.சி.பி., உத்தரவிட்டார். அதன்படி நேற்று முன்தினம் சந்தோஷ் மீது வழக்குப் பதிவானது. சந்தோஷை சஸ்பெண்ட் செய்து, போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை