மழை, வெப்பத்தால் சேதம் காய்கறிகள் விலை உயர்வு
பெங்களூரு: பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்தது, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததன் விளைவாக, காய்கறி விளைச்சல் சேதமடைந்தது. எனவே விலை அதிகரித்துள்ளது. காய்கறிகள் வாங்கவே மக்கள் தயங்குகின்றனர்.சமீப நாட்களாக, பெங்களூரு உட்பட பல மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. இதனால் காய்கறி விளைச்சல் பாதிப்படைந்தது. உற்பத்தி குறைந்ததால் விலையும் ஏறுமுகமாக உள்ளது.பீன்ஸ், பட்டாணி, முட்டை கோஸ், வெள்ளரிக்காய், பாகற்காய், கேரட், எலுமிச்சை பழம் என, பெரும்பாலான காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. அவரைக்காய் சீசன் முடிந்ததால், இதன் விலையும் அதிகரித்துள்ளது.பெங்களூரின் கலாசிபாளையா, தாசனபுரா, யஷ்வந்த்பூர், கே.ஆர்.மார்க்கெட், காந்தி பஜார், மல்லேஸ்வரம் என அனைத்து மார்க்கெட்களிலும் காய்கறி வரத்து குறைந்துள்ளது. தேவைக்கு ஏற்ற விளைச்சல் இல்லாததால், விலை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு காய்கறியின் விலையும், 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.காய்கறிகள் மட்டுமின்றி, வெந்தய கீரை, சிறு கீரை, பாலக்கீரை என, எந்த கீரையின் விலையும் கைக்கு எட்டும்படி இல்லை. புதிய விளைச்சல் வரும் வரை, விலை குறைய வாய்ப்பில்லை என, வியாபாரிகள் கூறியுள்ளனர்.