சிறைக்காவலர்கள் சீருடையில் கேமரா அணிவது கட்டாயம்!
குற்றவாளிகள் மனம் திருந்தி, நல்லவர்களாக வெளியே வர வேண்டும் என்பதற்காகவே சிறைகள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால், குற்ற வழக்கில் தண்டனை பெறும் கைதிகளில் பலர், வெளியில் இருந்து செய்யும் குற்றச்செயல்களை, சிறைக்குள் இருந்தபடி போலீஸ் பாதுகாப்புடன் செய்து வருவது ஆங்காங்கே நடந்து வருகிறது. ஜாமர் செயல்படுகிறாதா? எதிரிகளை கொலை செய்ய, 'ஸ்கெட்ச்' போடுவது, சிறையில் இருந்தபடியே தொழிலதிபர்களை தொடர்பு கொண்டு பேசி, பணம் கேட்டு மிரட்டுவது, ஆட்களை கடத்த சதி திட்டம் தீட்டிக் கொடுப்பது போன்ற வேலைகளை செய்கின்றனர். அத்துடன், புகையிலை, கஞ்சா போதைப் பொருட்களும் சிறைகளில் தாராளமாக புழங்குகின்றன. மேலும், தந்திரமான வழிகளில் மொபைல்போன்களை வரவழைத்து, அவற்றின் வாயிலாக, தங்களுக்கு வேண்டியவர்களுடன் குற்றவாளிகள் பேசுவதும் நடந்து வருகிறது. குற்றவாளிகளுக்கு இந்த வசதிகள் கிடைக்க, சிறைகளில் பணிபுரிவோரே உதவுகின்றனர். அதற்கு கைமாறாக கணிசமான பணத்தை லஞ்சமாகவும் பெற்றுக் கொள்கின்றனர். பல சிறைகளில் மொபைல் ஜாமர்களை பொருத்தியும், குற்றவாளிகள் மட்டும் எப்படி வெளியே உள்ள தங்கள் கூட்டாளிகளுடன் மொபைலில் பேசுகின்றனர் என்பது மர்மமாகவே உள்ளது. கடந்தாண்டு கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன் உட்பட 11 பேர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது, ரவுடி நாகாவுடன், நடிகர் தர்ஷன் நேரில் அமர்ந்தபடி டீ குடித்தது, சிகரெட் பிடித்தது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவின. இதனால், அதிர்ச்சி அடைந்த மாநில அரசு, தர்ஷன் உட்பட அவருடன் கைதானவர்களை மாநிலத்தின் பல சிறைகளுக்கு மாற்றியதுடன், சிறை அதிகாரிகளையும் இடமாற்றம் செய்தது. இந்த அதிரடிக்குப் பின், சர்ச்சை வீடியோக்கள் வெளியாகவில்லை. இதனால், போலீசார் நிம்மதி அடைந்திருந்தனர். தர்மசங்கடம் ஆனால், அவர்களின் நிம்மதியை குலைக்கும் வகையில், பயங்கரவாதி ஜுஹாத் ஹமீது ஷகீல், பெண்களை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற உமேஷ் ரெட்டி ஆகியோர், பரப்பன அக்ரஹாரா சிறையில் மொபைல்போனில் பேசியபடி இருக்கும் வீடியோ, கடந்த மாதம் பரவியது. அத்துடன், சில கைதிகள் மது குடித்து விட்டு ஆட்டம் போட்ட வீடியோவும் வெளியானது. கைதிகள் மது போதையில் நடனமாடிய வீடியோ, 2023ல் எடுக்கப்பட்டது என, மாநில அரசு சப்பைகட்டு கட்டினாலும், சிறையில் பயங்கரவாதி மொபைல்போன் பயன்படுத்துவது மாநில அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. உடனடியாக, பரப்பன அக்ரஹாரா சிறையில் ரெய்டு நடத்தப்பட்டு, 20க்கும் மேற்பட்ட மொபைல்போன்கள், கஞ்சா, சிகரெட், பீடி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணை நடத்திய அதிகாரிகள், சிறையின் முதன்மை கண்காணிப்பாளர் சுரேஷை உடனடியாக இடமாற்றம் செய்ததுடன், கண்காணிப்பாளர் மைகேரி, உதவி கண்காணிப்பாளர் அசோக் ஆகியோரை சஸ்பெண்டும் செய்தனர். தற்போது, நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டு உள்ள சிறை வளாகத்தில் கண்காணிப்பு கேமாராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அங்கு பணியாற்றும் ஊழியர்களும், சீருடையில் கேமரா அணிந்தபடி பணியாற்றுகின்றனர். அடிக்கடி ஆய்வு இந்நிலையில், பெங்களூரில் நேற்று சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., தயானந்தா அளித்த பேட்டி: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, தர்ஷன் அடைக்கப்பட்டு உள்ள சிறை வளாகத்தில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அது தவிர, சிறை காவலர்கள் சீருடையில் கேமரா அணிந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே நடைமுறையை, தற்போது சிறையில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும், காவலர்களும், ஊழியர்களும் பின்பற்ற வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்டயாம் சீருடையில் கேமரா அணிய வேண்டும். தினமும் மூன்று முதல் நான்கு முறை, இதுதொடர்பாக ஆய்வு செய்யப்படும். கைதிகளுடன் பேசும் போதும், அவர்களுக்கு சிறையில் வசதிகள் ஏற்படுத்தி தரும் போதும், காவலர்கள் கண்டிப்பாக கேமரா அணிய வேண்டும். சிறை வளாகத்தில் ஆய்வு செய்யும் போது, அங்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தால், அந்தப் பிரிவுக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் திருட்டு அல்லது கூட்டுச்சதியை தடுக்க முடியும். இத்தகைய முயற்சி, ஏற்கனவே பல சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க உதவி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக தயானந்தா இருந்த போது, பணியில் இருக்கும் போலீசார் அனைவரும், சீருடையில் கட்டாயம் கேமரா அணிந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அவரும் சீருடையில் இருக்கும் போது, கேமரா அணிந்து பணியாற்றி வந்தார். அந்த நடைமுறையை தற்போது, அனைத்து சிறை ஊழியர்களுக்கும் அமல்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.