உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடிக்கு, பெங்களூரு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெங்களூரு - பெலகாவி வந்தே பாரத் ரயில், ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா மெட்ரோ ரயில் சேவை, பெங்களூரு மெட்ரோ ரயிலின் மூன்றாம் கட்ட திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி நேற்று பெங்களூருக்கு வருகை தந்தார். அவரது வருகையையொட்டி நகர் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வந்தே பாரத் ரயில் துவக்க நிகழ்ச்சி, பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் நடந்தது. பாதுகாப்பு நடவடிக்கையாக ரயில் நிலையத்தின் பின்பக்க வாசல் வழியாக வரும் சாலை, ஓக்லிபுரம் மேம்பாலம் பகுதியில் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டு இருந்தது. பல்லாரி சாலையில் உள்ள இந்திய விமான படை பயிற்சி மைய, ஹெலிபேட்டில் இருந்து கார் மூலம் பிரதமர் மோடி சிட்டி ரயில் நிலையத்திற்கு சென்றார். அவர் சென்ற பாதையில் உள்ள மேக்ரி சதுக்கம், குமாரகிருபா சாலை, ஆனந்த்ராவ் சதுக்கம், மெஜஸ்டிக், கிராந்திவீரா சங்கொல்லி ராயண்ணா சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வழிநெடுக, பா.ஜ., தொண்டர்கள், பொதுமக்கள் கூடி நின்று பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சிட்டி ரயில் நிலையத்தில் நிகழ்ச்சியை முடித்து கொண்டு, ராகிகுட்டாவுக்கு பிரதமர் காரில் சென்றார். இந்த வழியில் உள்ள சேஷாத்திரி சாலை, கே.ஆர்.சதுக்கம், லால்பாக், ராகிகுட்டா, ஜெயநகர் உள்ளிட்ட பகுதிகளிலும், சாலையோரம் பொதுமக்கள் கூடி நின்று, பிரதமருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த மோடி, பொதுமக்களை பார்த்து உற்சாகமாக கையசைத்து சென்றார். 'வீ வாண்ட் மோடி', 'மோடிக்கு ஜெய்', 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம் விண்ணை பிளந்தது. நகர் முழுதும் பிரதமரை வரவேற்று கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன. பா.ஜ., கொடிகளும் பறந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை