நம்ம கிளினிக்கை மேம்படுத்த க்யூ.ஆர்., குறியீடு நடைமுறை
பெங்களூரு: 'நம்ம கிளினிக்'கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெங்களூரு மாநகராட்சி சுகாதாரத்துறை, புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது.கர்நாடகாவில் 2022ல் ஏழைகள், தினக்கூலிகள், குடிசை பகுதியில் வசிப்பவர்களுக்கு எளிய முறையில் மருத்துவ சேவைகள் கிடைப்பதற்காக 'நம்ம கிளீனிக்'கள் திறக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலான நம்ம கிளீனிக்கில், மருத்துவர்கள் இல்லை என்றும், சரியாக மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை என்றும் சமீப காலமாக புகார்கள் எழுந்தன.இதை கருத்தில் கொண்டு பெங்களூரு மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து சிறப்பு ஆணையர் சுரல்கர் விகாஸ் கிஷோர் கூறியதாவது:கிளீனிக்குகளில் உள்ள மருத்துவ பிரச்னைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வார்டிலும் பொது இடங்களில் க்யூ.ஆர்., குறியீடுகள் பொருத்தப்பட உள்ளன.இந்த குறியீடுகளை, மக்கள் தங்கள் மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்து பார்த்தால், அருகில் உள்ள நம்ம கிளீனிக் பற்றி முழு தகவல்கள், கிளீனிக்கில் உள்ள மருத்துவ வசதிகள், மருத்துவர் குறித்த விபரங்களை அறிந்து கொள்ளலாம்.நம்ம கிளீனிக் குறித்து மக்களிடையே விழிப்புணவர்வை ஏற்படுத்தும் நோக்கில் இப்புதிய திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. நம்ம கிளீனிக்குகளில், வாரத்திற்கு ஒரு முறை யோகா பயிற்சி மக்களுக்கு இலவசமாக நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.