ராகி உருண்டை சாப்பிடும் போட்டி பெங்களூரு அக்கா - தம்பி அபாரம்
ஹெச்.எஸ்.ஆர்.: 17-: பெங்களூரில் நேற்று நடந்த ராகி எனும் கேழ்வரகு உருண்டை சாப்பிடும் போட்டியில், அக்கா - தம்பி முதல் இடம் பிடித்து அசத்தினர். கர்நாடகாவின் அதிகாரப்பூர்வ தேசிய கீதம் 'ஜெய பாரத ஜனனியா தனுஜாதே' வின் நுாற்றாண்டை ஒட்டி, பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் நேற்று வக்கீல்கள் சங்கம் சார்பில், ராகி உருண்டை சாப்பிடும் போட்டி நடந்தது. இப்போட்டியில் பெங்களூரு ரூரல், மாண்டியா, ஹாசன், ராம்நகர், சித்ரதுர்கா, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 150 பேர் கலந்து கொண்டனர். இதில் 125 பேர் ஆண்கள். 25 பேர் பெண்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் யார் அதிகம் ராகி உருண்டை சாப்பிடுகிறார்களோ அவர்கள் வெற்றியாளர்கள் என்று, போட்டியை நடத்தும் வக்கீல் சங்கம் அறிவித்தது. இதனால் போட்டியில் கலந்து கொண்டவர்கள் ராகி உருண்டையை, நாட்டு கோழி குழம்பு, முட்டையுடன் சேர்த்து வேகமாக சாப்பிட்டனர். இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் ஒயிட்பீல்டை சேர்ந்த அஜய் குமார், 29 முதலிடமும், அவரது அக்கா சவும்யா, 30 பெண்கள் பிரிவில் முதலிடமும் பிடித்தனர். அஜய் குமார் 12 ராகி உருண்டையும், சவும்யா 10 ராகி உருண்டையும் சாப்பிட்டனர். அஜய் குமாருக்கு செம்மறியாடு பரிசாக வழங்கப்பட்டது. சவும்யாவுக்கு 32 இஞ்ச் டிவி, 5,000 ரூபாய் ரொக்கம், ஒரு சேலை பரிசாக கிடைத்தது.