மழைநீர் வடிகால் பணி ரூ.1 லட்சம் அபராதம்
பெங்களூரு: ''ஹெச்.ஏ.எல்., 2ம் கட்டத்தில் உள்ள 12வது பிரதான சாலை, கிராஸ் சாலைகளில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை, விரைந்து முடிக்காவிட்டால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,'' என, பெங்களூரு கிழக்கு மண்டல கமிஷனர் சினேஹல் உத்தரவிட்டு உள்ளார்.பெங்களூரு மாநகராட்சி கிழக்கு மண்டல கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மண்டல கமிஷனர் சினேஹல், அதிகாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர். தங்கள் பகுதி குறைகளை, பலரும் புகார்களாக அளித்தனர். இது போன்று 22 புகார்கள் அளிக்கப்பட்டன. உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.அவர் பேசியதாவது:ஹெச்.ஏ.எல்., 2ம் கட்டத்தில் உள்ள 12வது பிரதான சாலை, கிராஸ் சாலைகளில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை, விரைந்து முடிக்க வேண்டும். இல்லையெனில், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.ஓ.எம்.பி.ஆர்., லே - அவுட் பகுதியில் அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் அகற்றப்பட வேண்டும். சாலையோரங்களில் குப்பை கொட்டாத அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஹெச்.ஆர்.பி.ஆர்., 1வது பிளாக் பகுதியில் சாலையில் ஆக்கிரமிப்புகளால், மழைநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதை அதிகாரிகள் உடனடியாக கவனிக்க வேண்டும்.கே.எஸ்.எப்.சி., லே - அவுட் பகுதியில் உள்ள சாலையோரங்களில் காய்ந்த நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும். சிவாஜி நகர் கோல்ஸ் பார்க்கிற்குள் வாகனங்கள் நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.