ராஜண்ணா நீக்கம்: பா.ஜ., போராட்டம்
பெங்களூரு : ராஜண்ணாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது தொடர்பாக, சட்டசபையில் இன்று பா.ஜ., போராட்டம் நடத்துவது தொடர்பாக, நேற்று இரவு பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசித்தனர். கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று துவங்கியது. இதற்கு முன்பாக, விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். சின்னசாமி மைதானம் முன்பு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியானதற்கு முதல்வர், துணை முதல்வர், உள்துறை அமைச்சர், அமைச்சர்கள் பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும். அப்பாவி போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது கண்டிக்கத்தக்கது என்று கோஷம் எழுப்பினர். உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். வடமாவட்டங்களில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. விவசாயிகள் தற்கொலை செய்தாலும் அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த அரசு இருக்கிறதா, செத்து விட்டதா என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், சட்டசபைக்கு சென்றனர். இந்நிலையில் ராஜண்ணாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி இருக்கும் விஷயத்தை கையில் எடுத்து, சட்டசபையில் இன்று போராட்டம் நடத்த பா.ஜ., தயாராகி வருகிறது. இதுகுறித்து விவாதிக்க நேற்று இரவு பெங்களூரி ல் உள்ள தனியார் ஹோட்டலில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.