சிறை துறையில் சீர்திருத்தம் அவசியம்: புதிய டி.ஜி.பி., அலோக் குமார் பேட்டி
பெங்களூரு: ''சிறை துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்,'' என்று, அத்துறையின் புதிய டி.ஜி.பி., அலோக் குமார் கூறினார். கர்நாடகாவின் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி அலோக் குமார், போலீஸ் பயிற்சி கல்லுாரியில் கூடுதல் டி.ஜி.பி.,யாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவருக்கு டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு வழங்கி, நேற்று முன்தினம் அரசு உத்தரவு பிறப்பித்தது. சிறை துறை டி.ஜி.பி.,யாக அவர் நியமிக்கப்பட்டார். பெங்களூரு சேஷாத்ரி சாலையில் உள்ள சிறை துறை தலைமை அலுவலகத்தில், அலோக் குமார் நேற்று பொறுப்பு ஏற்று கொண்டார். பின், அவர் அளித்த பேட்டி: நான் இதற்கு முன் சிறை துறையில் பணியாற்றிய போது, மாநிலத்தின் பல சிறைகளுக்கு சென்று ஆய்வு செய்து உள்ளேன். பரப்பன அக்ரஹாரா சிறையில் பல முறை சோதனை நடத்தி உள்ளேன். சிறை மட்டுமின்றி, சிறை துறையிலும் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம். அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சிறை துறையில் உள்ள பிரச்னைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சிறை துறையில் பணியாற்றும் ஒவ்வொரு அதிகாரியும, ஊழியர்களும் மிகவும் முக்கியமானவர்கள். இவர்களால் சிறையில் நடக்கும் முறைகேட்டை கட்டுப்படுத்த முடியும். நன்கு வேலை செய்யும் அதிகாரிகள் எப்போதும் ஊக்குவிக்கப்படுவர். தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவர். என் துறையில் தெரியாமல் தவறு செய்யும் அதிகாரிகளை மன்னித்து விடுவேன். வேண்டுமென்றே தவறு செய்வதை பார்த்து கொண்டு பொறுமையாக இருக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.