முதல்வருக்கு ஹனிடிராப் பயம் சலவாதி நாராயணசாமி கிண்டல்
ராம்நகர்: “முதல்வர் சித்தராமையாவுக்கு 'ஹனிடிராப்' பயம் ஏற்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் உள்ளது,” என, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி கூறினார்.ராம்நகரில் அவர் அளித்த பேட்டி:என் 45 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இவ்வளவு மோசமான அரசை நான் பார்த்தது இல்லை. மாநிலத்தின் மொத்த வளர்ச்சி பூஜ்யம். சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. முதல்வர் சித்தராமையா மிக மோசமான நிர்வாகம் நடத்துகிறார். அரசின் நிர்வாகம் குப்பைக்கு சமமானது. விவசாயிகள் பிரச்னைகள் மீது கவனம் செலுத்த மறந்துவிட்டனர்.எவ்வளவு கொள்ளையடிப்பது, எவ்வளவு சேர்ப்பது, யாருடைய தொலைபேசியை ஒட்டுக்கேட்பது, யாரை 'ஹனிடிராப்' செய்வது என்பது தான் இந்த அரசில் நடந்து வருகிறது.மக்கள் கஷ்டங்களை தீர்ப்பதற்கு பதிலாக, அத்தியாவசிய பொருட்கள் விலையை உயர்த்துவது தான் அரசின் சாதனை. மாநிலத்தை மோசமான சூழ்நிலைக்கு தள்ளுவதற்கு பதிலாக, முதல்வர் கவுரவமாக ராஜினாமா செய்திருக்க வேண்டும்.காங்கிரஸ் அரசு, தலித் மக்களை ஏமாற்றியது. எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்திற்கு விடுவிக்கப்பட்ட பணத்தை, வாக்குறுதித் திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது. 'ஹனிடிராப்'பில் பா.ஜ., தலைவர்கள் யாரும் சிக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கும்.சொந்த கட்சியினரே வீழ்த்தும் முயற்சி, காங்கிரசில் படுஜோராக நடக்கிறது. அவர்களுக்கு வெட்கம், மானம் இல்லையா?அமைச்சர் ராஜண்ணாவை 'ஹனிடிராப்' செய்ய முயன்றது பற்றி, சித்தராமையா பேச பயப்படுகிறார். அவருக்கும் 'ஹனிடிராப்' பயம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. உங்களுக்கு பயம் இல்லை என்றால், விசாரணைக்கு உத்தரவிட தயங்குவது ஏன்?இவ்வாறு அவர் கூறினார்.