உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ராகிகுட்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் தவறி விழுந்து உயிர் தப்பிய செக்யூரிட்டி

ராகிகுட்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் தவறி விழுந்து உயிர் தப்பிய செக்யூரிட்டி

பெங்களூரு : ராகிகுட்டா - பொம்மனஹள்ளி மஞ்சள் வழித்தடத்தில் ராகிகுட்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் தவறி விழுந்த பாதுகாவலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பெங்களூரு ஆர்.வி., சாலை - பொம்மனஹள்ளி இடையே மஞ்சள் வழித்தட மெட்ரோ ரயிலை, பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் துவக்கி வைத்தார். கடந்த 25ம் தேதி ராகிகுட்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 52 வயது செக்யூரிட்டி தவறி கீழே விழுந்தார். இதை பார்த்த முதல் நடைமேடையில் இருந்த மற்றொரு செக்யூரிட்டி, உடனடியாக ரயில் தண்டவாளத்தின் மின் இணைப்பை துண்டித்தார். கீழே விழுந்த செக்யூரிட்டி, ஏற முடியாமல் தவித்தபோது, அங்கிருந்த பயணி ஒருவர் வேகமாக ஓடி வந்து, அவருக்கு கை கொடுத்து மேலே துாக்கிவிட்டார்; இதனால் அதிர்ஷ்டவசமாக செக்யூரிட்டி உயிர் தப்பினார். இதுகுறித்து நம்ம மெட்ரோ ரயில் நிர்வாகம், 'தவறி விழுந்த செக்யூரிட்டி நலமாக உள்ளார். அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதனால் அவ்வழித்தடத்தில் சில நிமிடங்கள் ரயில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. அதன் பின் மீண்டும் வழக்கம் போல் இயங்கின' என தெரிவித்தது. மெட்ரோ ரயில் தகவல்படி, 'கீழே தவறி விழுந்த செக்யூரிட்டி, தொடர்ந்து 16 மணி நேரம் வேலை செய்து வந்துள்ளார். சிறிது ஓய்வு எடுத்த பின், மீண்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். 'இச்சம்பவத்துக்கு பின், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக துறை ரீதியில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை நீண்ட நேரம் பணியில் வேலை செய்ய அனுமதி கொடுத்தது குறித்து, ஸ்டேஷன் நிர்வாகியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது' என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ